எருமப்பட்டி பேரூராட்சியில் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு


எருமப்பட்டி பேரூராட்சியில் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு
x
தினத்தந்தி 18 Feb 2022 9:54 PM IST (Updated: 18 Feb 2022 9:54 PM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி பேரூராட்சியில் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு

எருமப்பட்டி:
எருமப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 5 நகராட்சிகள் மற்றும் 19 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், எழுதுபொருட்கள், படிவங்கள் மற்றும் அழியாத மை குப்பிகள் உள்பட வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது.
மேலும் கொரோனா நோய்த்தடுப்பு வழிமுறைகளை பின்பற்றும் வகையில் தெர்மல் ஸ்கேனர், கிருமிநாசினி, முககவசங்கள் மற்றும் கையுறைகள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டன. அதை நாமக்கல் நகராட்சி அலுவலகம் மற்றும் எருமப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கண்காணிப்பு கேமராக்கள்
அதைத்தொடர்ந்து சேந்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார். அப்போது அங்கு வாக்குப்பதிவிற்காக வந்திருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களையும், அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் அவர் பார்வையிட்டார்.
மேலும் அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டு உள்ளதா? அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பது குறித்தும் அவர் கேட்டறிந்தார். அப்போது நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா, பேரூராட்சி அலுவலர்கள் தனுஷ்கோடி, சக்திவேல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செல்வி, ராமராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். நாமக்கல் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் நல்லிபாளையம் இன்ஸ்பெக்டர் எருமப்பட்டி (பொறுப்பு) குமாரவேல் பாண்டியன், எருமப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பிற பகுதிகள்
இதேபோல் நாமக்கல், முதலைப்பட்டி, ராசிபுரம், பிள்ளாநல்லூர் உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளிலும் கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Next Story