51 வாக்குச்சாவடிகள் சி.சி.டி.வி.கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பதற்றமாக உள்ள 51 வாக்குச்சாவடிகள் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்று கலெக்டர் லலிதா தெரிவித்தார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் பதற்றமாக உள்ள 51 வாக்குச்சாவடிகள் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்று கலெக்டர் லலிதா தெரிவித்தார்.
கலெக்டர் ஆய்வு
மயிலாடுதுறை நகராட்சியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறையை பார்வையிட்டு எந்திரங்கள் அனுப்புவதற்கு தயார்படுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ஞானாம்பிகை அரசு மகளிர் கல்லூரி மற்றும் டி.பி.டி.ஆர். தேசிய மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், வாக்கு பெட்டிகள் வைக்கப்படும் பாதுகாப்பு அறையில் பாதுகாப்பு வசதிகள், சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதை பார்வையிட்டார். தொடர்ந்து போலீசாருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
51 மையங்கள் பதற்றமானவை
மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் மணல்மேடு, குத்தாலம், தரங்கம்பாடி, வைதீஸ்வரன்கோவில் ஆகிய 4 பேரூராட்சிகளுக்கு நாளை (இன்று) நடைபெறும் வாக்கு பதிவிற்காக 177 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 51 மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. பதற்றமாக உள்ள மையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் மைக்ரோ அப்சர்வர்கள் மற்றும் போலீசார் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
பாதுகாப்பு பலப்படுத்தப்படும்
இந்த தேர்தலில் 854 அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை நகராட்சியில் பதிவாகும் வாக்குபெட்டிகள் தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கல்லூரியிலும், 4 பேரூராட்சிகளின் வாக்குபெட்டிகள் டி.பி.டி.ஆர். தேசிய மேல்நிலைப்பள்ளியிலும், சீர்காழி நகராட்சி வாக்குபெட்டிகள் சீர்காழி சபாநாயகர் முதலியார் மேல்நிலைப் பள்ளியிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.
இந்த பாதுகாப்பு அறைகள் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் எப்போது வேண்டுமானாலும் எந்தவித ஐயப்பாடும் இல்லாமல் சி.சி.டி.வி. காட்சிகளை பார்வையிட்டு் கொள்ளலாம். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story