நீலகிரி அணைகளில் நீர்மட்டம் குறைந்தது
மின் உற்பத்தி அதிகரித்ததால் நீலகிரி அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளது.
ஊட்டி
மின் உற்பத்தி அதிகரித்ததால் நீலகிரி அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளது.
13 அணைகள்
நீலகிரி மாவட்டத்தில் மின்வாரியம் கட்டுப்பாட்டில் குந்தா, கெத்தை, அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பார்சன்ஸ்வேலி, காமராஜ் சாகர், பைக்காரா, கிளன்மார்கன், மாயார், முக்கூருத்தி உள்பட 13 அணைகள் உள்ளன. இங்கு 12 மின் நிலையங்கள் மூலம் தினமும் 850 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்ததால் அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் முதல் குளிர்காலம் தொடங்கியதால் 2 மாதங்களாக மழை இல்லை. இதனால் அணைகளில் இருப்பில் இருந்த தண்ணீரை கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
மின் உற்பத்தி
பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் எமரால்டு அணைக்கும், அப்பர்பவானி அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் அவலாஞ்சி அணைக்கும் பெரிய குழாய்கள் மூலம் கொண்டு சென்று மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது குளிர்காலம் முடிந்து கோடை காலம் தொடங்க உள்ளது.
இதனால் சமவெளி பகுதிகளில் மின் தேவை அதிகரித்து இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு நீலகிரியில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் மின்வாரிய அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப் பட்டு மற்றொரு அணையில் தேக்கி வைத்து மின் உற்பத்தி செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
நீர்மட்டம் குறைவு
மின்வாரிய அணைகளில் இருப்பில் உள்ள தண்ணீரை கொண்டு தினமும் மின் உற்பத்தி செய்து கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. மின் உற்பத்தி அதிகரித்ததால் அணைகளில் நீர்மட்டம் குறைந்து உள்ளது.
வருகிற ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழையும் ஜூன் மாதத்தில் இருந்து தென்மேற்கு பருவமழையும் பெய்தால் அணையில் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. படிப்படியாக அணைகளில் மின் உற்பத்தி செய்த பின்னர் தண்ணீர் பவானிசாகர் அணையை சென்றடைகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story