தேர்தலில் அசம்பாவிதங்களை தடுக்க 57 போலீஸ் படைகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தலின் போது அசம்பாவிதங்களை நடைபெறாமல் தடுக்க 57 போலீஸ் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
திண்டுக்கல்:
தேர்தல் பாதுகாப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. இதையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் 1,871 போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதன்படி வாக்குச்சாவடிகள், பிரச்சினைக்குரிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தேர்தலின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு போலீஸ் சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் மாவட்ட அளவில் தலா 15 போலீஸ்காரர்களை கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
57 போலீஸ் படைகள்
இதுதவிர போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தலைமையில் தலா 15 போலீசாரை கொண்ட 13 தனிப்படைகளும், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 10 படைகளும், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 30 படைகளும் என மொத்தம் 57 போலீஸ் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த போலீஸ் படையினர் பதற்றமான பகுதிகளில் நேற்று மாலை தொடங்கி இரவு வரை ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். மேலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறுவது குறித்து தகவல் வந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று பிரச்சினைகளை தடுப்பார்கள்.
இதற்காக போலீஸ் படையினருக்கு தனித்தனியாக வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி வாகனங்களை வழங்கினார். இதில் போலீஸ் படைகளுக்கு நியமிக்கப்பட்ட போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
Related Tags :
Next Story