அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்


அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 Feb 2022 11:34 PM IST (Updated: 18 Feb 2022 11:34 PM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டியில் அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்வதாக புகார் செய்தனர்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டியில் அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்வதாக புகார் செய்தனர்.

சாலை மறியல்

உசிலம்பட்டி நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்கிறது. நேற்று முன்தினம் மாலையுடன் இறுதிக்கட்ட பிரசாரம் முடிவடைந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி முதல் தி.மு.க.வினர் 6,7,8,9,10 உள்ளிட்ட வார்டு பகுதியில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி வருவதாக போலீசாருக்கு அ.தி.மு.க.வினர் தகவல் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் இதை கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டி மதுரை-தேனி சாலையில் உள்ள கீழப்புதூரில் உசிலம்பட்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அய்யப்பன் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று காலை திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

 இதில் நகர செயலாளர் பூமாராஜா, மாநில ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் துரை தனராஜன், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், மாவட்ட மாணவரணி செயலாளர் வக்கீல் மகேந்திரபாண்டி மற்றும் நகரமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்ததும் விரைந்து வந்த உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கரன், சாலை மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.இதனை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. 
உரிய நடவடிக்கை இல்லையெனில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என உசிலம்பட்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அய்யப்பன் போலீசாரிடம் தெரிவித்தார். இந்த சாலை மறியல் போராட்டத்தால் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story