தஞ்சை மாவட்டத்தில் 6¼ லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 6¼ லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 6¼ லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகளுக்கும், கும்பகோணம் மாநகராட்சியில் 48 வார்டுகளுக்கும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகளுக்கும், அதிராம்பட்டினம் நகராட்சியில் 27 வார்டுகளுக்கும், 20 பேரூராட்சிகளில் 297 வார்டுகளுக்கும் என மொத்தம் 456 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது.
இந்த வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பிலும், சுயேச்சையாகவும் என 2 ஆயிரத்து 37 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.
வாக்காளர்கள்
தற்போது வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தஞ்சை மாநகராட்சியில் 196 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 95 ஆயிரத்து 261 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 4 ஆயிரத்து 230 பெண் வாக்காளர்களும், 15 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 1 லட்சத்து 99 ஆயிரத்து 506 பேர் வாக்களிக்க உள்ளனர்.
கும்பகோணம் மாநகராட்சியில் 139 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 62 ஆயிரத்து 720 ஆண் வாக்காளர்களும், 65 ஆயிரத்து 904 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 1 லட்சத்து 28 ஆயிரத்து 627 பேர் வாக்களிக்க உள்ளனர்.
பட்டுக்கோட்டை நகராட்சி
பட்டுக்கோட்டை நகராட்சியில் 66 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 30 ஆயிரத்து 119 ஆண் வாக்காளர்களும், 32 ஆயிரத்து 340 பெண் வாக்காளர்களும், 18 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 62 ஆயிரத்து 477 பேர் வாக்களிக்க உள்ளனர்.
அதிராம்பட்டினம் நகராட்சியில் 33 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 13 ஆயிரத்து 382 ஆண் வாக்காளர்களும், 13 ஆயிரத்து 863 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 27 ஆயிரத்து 245 பேர் வாக்களிக்க உள்ளனர்.
20 பேரூராட்சிகளில் 316 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 631 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 11 ஆயிரத்து 233 பெண் வாக்காளர்களும், 21 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரத்து 885 பேர் வாக்களிக்க உள்ளனர்.
750 வாக்குச்சாவடிகள்
தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள 2 மாநகராட்சிகள், 2 நகராட்சிகள், 20 பேரூராட்சிகளில் மொத்தம் 750 வாக்குச்சாவடிகளில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 113 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 27 ஆயிரத்து 570 பெண் வாக்காளர்களும், 57 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 6 லட்சத்து 33 ஆயிரத்து 740 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க அனைத்து வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளது. எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story