கர்நாடக சட்டசபை 3-வது நாளாக முடங்கியது
கர்நாடக சட்டசபை 3வது நாளாக முடங்கியது
பெங்களூரு: மந்திரி ஈசுவரப்பாவை நீக்க கோரி 3-வது நாளாக காங்கிரஸ் தர்ணா நடத்தியதால் கர்நாடக சட்டசபை 3-வது நாளாக முடங்கியது. சபை வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைப்பு தீர்மானம்
ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா, டெல்லி செங்கோட்டையில் ஒரு நாள் காவி கொடி ஏற்றப்படும் நிலை வரும் என்று கூறினார். இதன் மூலம் அவர் தேசிய கொடியை அவமதித்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று என்று அக்கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில், ஈசுவரப்பா கருத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சி கடந்த 16-ந் தேதி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அதன் மீது ஆரம்பகட்ட கருத்துகளை தெரிவிக்குமாறு சபாநாயகர் கேட்டுக்கொண்டதை அடுத்து சித்தராமையா பேசினார். ஒத்திவைப்பு தீர்மானத்தை நிராகரிக்குமாறு அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து அந்த தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்தார்.
உள்ளிருப்பு போராட்டம்
இந்த நிலையில் மந்திரி ஈசுவரப்பாவை பதவி நீக்கம் செய்ய கோரி காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா நடத்தினர். இதனால் அன்றைய தின சபை நிகழ்வுகள் முடங்கின. இதையடுத்து நேற்று முன்தினமும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபை கூடியதும் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதனால் சபை 2-வது நாளாக முடங்கியது. மேலும் நேற்று முன்தினம் இரவு அக்கட்சி உறுப்பினர்கள் சபைக்குள் பகல்-இரவாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அங்கேயே படுத்து தூங்கினர். மேல்-சபை உறுப்பினர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3-வது நாளாக
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சபாநாயகர் காகேரி, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் சட்டசபைக்கு வந்து சித்தராமையாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர். அந்த வேண்டுகோளை சித்தராமையா நிராகரித்துவிட்டார். இந்த நிலையில் கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரின் 5-வது நாள் கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், சபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.வி.மண்டூர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு 3-வது நாளாக தங்களின் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்கள் குரலை உயர்த்தி கோஷங்களை எழுப்பினர். ஈசுவரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.
சபாநாயகர் பீடத்திற்கு அவமானம்
இந்த அமளிக்கு இடையே கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட மந்திரிகள் பதிலளித்தனர். அவையில் அமளி நிலவியதால் யார் என்ன பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. கேள்வி நேரம் முடிந்ததும், ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
21-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
கடும் அமளியில் ஈடுபட்ட காங்கிரசாரை இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் காகேரி கேட்டு கொண்டார். ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து பிடிவாதமாக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து சபையை வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதன் மூலம் கர்நாடக சட்டசபை நிகழ்வுகள் தொடர்ந்து 3-வது நாளாக முடங்கியது. மேல்-சபையிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா நடத்தியதால், அங்கும் சபை முடங்கியது. அந்த சபையும் வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Related Tags :
Next Story