தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 19 Feb 2022 1:50 AM IST (Updated: 19 Feb 2022 1:50 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்த சாலை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்- திருச்ெசங்கோடு காவேரி ரெயில் நிலைய நுழைவு பாலத்தில் கான்கிரீட் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் ஆங்காங்கே சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த கம்பிகள், அந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உயர் அதிகாரிகள் இதுதொடர்பான போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், நாமக்கல்.
வேகத்தடை வேண்டும்
நாமக்கல் டவுன்- திருச்செங்கோடு ரோடு செல்லும் வழியில் பிரதான சாலையான தமிழ்நாடு வேர்ஹவுஸ் மற்றும் பெட்ரோல் பங்க் இணையும் 3 வழி சாலை உள்ளது. இந்த பகுதியில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.. எனவே பொதுமக்களின் நலன் கருதி 3 ரோடு சந்திக்கும் பகுதியில் வேகத்தடை அமைப்பதுடன், வேகத்தடை இருப்பதற்கான அறிவிப்பு பலகை சாலையோரம் வைக்க வேண்டும்.
-கார்த்திக், நாமக்கல்.
சாலையோரத்தில் கொட்டப்படும் கோழிக்கழிவுகள்
கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் தின்னகழனி கிராமம் உள்ளது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் பின்புறம் அமைந்துள்ள இந்த கிராமத்தில் சாலையோரத்தில் தினமும் கோழிக்கழிவுகள், குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரங்களில் கோழிக்கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.
-பிரேம், கிருஷ்ணகிரி.
ஆமை வேகத்தில் பாலம் பணி
தர்மபுரி நகரில் பென்னாகரம் மெயின் ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகில் ஏ.எஸ்.டி.சி. நகர், ஆவின் நகர், நந்தி நகர், பீமனேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையில் மழைநீர் வடிகால் கால்வாய் மற்றும் சிறு பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
-நடராஜன், ஆவின் நகர், தர்மபுரி.

Related Tags :
Next Story