ரேஷன் கடைகளை பூட்டி சாவியை ஒப்படைக்கும் போராட்டம்


ரேஷன் கடைகளை பூட்டி சாவியை ஒப்படைக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2022 1:56 AM IST (Updated: 19 Feb 2022 1:56 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ரேஷன் கடைகளை பூட்டி சாவியை ஒப்படைத்துவிட்டு காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த அனைத்து கூட்டுறவு பணியாளர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

விருதுநகர், 
 கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ரேஷன் கடைகளை பூட்டி சாவியை ஒப்படைத்துவிட்டு காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த அனைத்து கூட்டுறவு பணியாளர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 
மாவட்ட குழு கூட்டம் 
விருதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் மாநில துணைத்தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் ராகவன், பொருளாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பயிர் கடன் வழங்குவதில் மாநில அளவில் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்கள் மட்டும் தற்போது பணியில் உள்ளவர்களுக்கு முறையே கருணை ஓய்வுதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவை தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். கூடுதல் பணியிடங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு 30 சதவீதம் கூடுதல் ஊதியம் அனுமதிக்கப்பட வேண்டும்.
அகவிலைப்படி 
கூட்டுறவு வங்கிகள் மூலம் நடைபெற்ற பண பரிவர்த்தனைகளுக்கு 2 சதவீத வருமான வரி பிடித்தம் செய்யப்பட்ட நிலையில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரேஷன் கடைநிலை பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 17 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் எந்திர குறைபாடு காரணமாக ஏற்படும் நிதி இழப்பிற்கு விற்பனையாளரிடம் வசூலிக்கக்கூடாது. மாவட்ட ஆட்சேர்ப்பு மையம் மூலம் ரேஷன் கடையில் தேர்வு செய்யப்பட்டு 50 கிலோ மீட்டருக்கு அப்பால் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக பணி இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
போராட்டம்
இ்ந்த தீர்மானங்கள் அடிப்படையிலான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு துறை மற்றும் இதர துறைகளுக்கு எவ்வித புள்ளி விவரமும் வழங்குவதில்லை. ஆய்வுக் கூட்டங்களிலும் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்யப்பட்டது.
 மேலும் மார்ச் 7-ந் தேதி முதல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் ரேஷன்கடைகளை அடைத்துவிட்டு சாவிகளை மண்டல இணைப்பதிவாளரிடம் ஒப்படைத்துவிட்டு காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

Next Story