வாக்குப்பதிவு எந்திரம் திடீர் பழுது
வாக்குப்பதிவு எந்திரம் திடீர் பழுது
உடுமலை நகராட்சி 33வது வார்டுக்கான வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் திடீரென்று பழுதடைந்ததால், மாற்று எந்திரம் கொண்டு வரும் வரை ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
வாக்குப்பதிவு எந்திரம் பழுது
உடுமலை நகராட்சியில் மொத்தம்33வார்டுகள் உள்ளன.இந்த வார்டுகளில் மொத்தம் 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில்14 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த தி.மு.க.வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 63 ஆக குறைக்கப்பட்ட நிலையில், 32 வார்டுகளில் அமைக்கப்பட்டிருந்த 63 வாக்குச்சாவடிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் உடுமலை ருத்ரப்பா நகரில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி வகுப்பறைகளில் 32 வது வார்டுக்கு ஆண்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், பெண்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டிருந்தது.
இதே பள்ளிவளாகத்தில் மற்றொரு வகுப்பறையில் 33 வது வார்டுக்கான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடி ஆண்கள்மற்றும் பெண்களுக்காக ஒரே வாக்குச்சாவடியாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ருத்ரப்பா நகரில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள 33 வது வார்டுக்கான வாக்குச்சாவடியில் காலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் காலை 8.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது.
மாற்று எந்திரம்
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் வந்து பார்த்து உடனடியாக பழுதை சரி செய்தனர். இந்த இடைபட்ட நேரத்தில் சுமார் 10 நிமிடங்கள் வாக்குப்பதிவு தடைபட்டது. பழுது சரிசெய்யப்பட்டு மொத்தம் 137 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் காலை 9.35மணிக்கு மீண்டும் அதே பட்டன் பகுதி பழுதடைந்து வாக்குப்பதிவு செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுது பார்க்கும் பொறியாளர் விரைந்து வந்து பார்த்தார். அவர், அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தொடர்ந்து பயன்படுத்தாமல், மாற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஏற்பாடு செய்யும்படி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரான நகராட்சி ஆணையாளருக்குபரிந்துரை செய்தார்.
இதைத்தொடர்ந்து நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர், நகராட்சி அலுவலகத்தில் ஸ்பேர் வைத்துள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அந்த வார்டில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் சின்னங்களை பொருத்தி அந்த வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைத்தார்.அங்கு காலையில் இருந்து 137 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திற்கு, வேட்பாளர்களின் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்து தனியாக பாதுகாப்பாக எடுத்து வைத்தனர்.
மீண்டும் வாக்குப்பதிவு
இதைத்தொடர்ந்து புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குப்பதிவு, தேர்தல் நடத்தும் அலுவலரான நகராட்சி ஆணையாளர் பி.சத்தியநாதன் மற்றும் அதிகாரிகள், வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் முன்னிலையில் காலை 10.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்ததால் சுமார் ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் வாக்காளர் வாக்குப்பதிவு செய்வதற்காக வாக்குச்சாவடிக்கு வந்துகொண்டிருந்ததால் அங்கு ஒரே நேரத்தில் வாக்காளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அந்த நேரத்தில் அங்கு பாதுகாப்பிற்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
Related Tags :
Next Story