பஸ்சை முந்திச்செல்ல முயன்றபோது லாரி மோதி மொபட் தீப்பிடித்தது; முதியவர் பலி - மற்றொருவர் படுகாயம்


பஸ்சை முந்திச்செல்ல முயன்றபோது லாரி மோதி மொபட் தீப்பிடித்தது; முதியவர் பலி - மற்றொருவர் படுகாயம்
x
தினத்தந்தி 19 Feb 2022 5:55 PM IST (Updated: 19 Feb 2022 5:55 PM IST)
t-max-icont-min-icon

பஸ்சை முந்திச்செல்ல முயன்றபோது மொபட் மீது லாரி மோதியது. இதில் மொபட் தீப்பிடித்து எரிந்தது. மொபட்டில் சென்ற முதியவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

ஆவடி,

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் மணிகண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் அழகுதுரை (வயது 70). ஆவின் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வுபெற்றவர். திருமுல்லைவாயல் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி (70). ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்.

இவர்கள் இருவரும் நேற்று காலை மொபட்டில் ஆவடி நோக்கி சென்றுகொண்டிருந்தனர். மொபட்டை மூர்த்தி ஓட்டினார். அவருக்கு பின்னால் அழகுதுரை அமர்ந்து இருந்தார்.

ஆவடி பஸ் நிலையம் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்சை மூர்த்தி முந்திச்செல்ல முயன்றார். அப்போது அவருக்கு பின்னால் வந்த டிப்பர் லாரி, இவர்களது மொபட்டில் உரசியது.

இதில் பஸ்சுக்கும், லாரிக்கும் நடுவில் சிக்கிய அழகுதுரை, மூர்த்தி இருவரும் மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் ஆவடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், தலையில் படுகாயம் அடைந்த அழகுதுரை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மூர்த்திக்கு வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சாலையில் விழுந்த மொபட் மீது டிப்பர் லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதால் மொபட் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், மொபட்டில் எரிந்த தீயை அணைத்து, அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

விபத்து தொடர்பாக பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான அழகுதுரை உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக லாரி டிரைவரான ராணிப்பேட்டையைச் சேர்ந்த முனுசாமி (50) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story