நீலகிரியில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நீலகிரியில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டுபோட்டனர்.
ஊட்டி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நீலகிரியில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டுபோட்டனர்.
406 வாக்குச்சாவடிகள்
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள், அதிகரட்டி, பிக்கட்டி, கேத்தி, கீழ்குந்தா, சோலார், உலிக்கல், நடுவட்டம், கோத்தகிரி, ஓவேலி, தேவர்சோலை, ஜெகதளா ஆகிய 11 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதற்காக 4 நகராட்சிகளில் 201 வாக்குச்சாவடிகள், 11 பேரூராட்சிகளில் 205 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 406 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டு இருந்தன. அங்கு வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.
ஆர்வமுடன் வாக்களித்தனர்
நீலகிரியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. ஊட்டியில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு காலை முதலே வாக்காளர்கள் வாக்களிக்க வந்தனர். காந்தல் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் கூலி வேலைக்கு செல்லும் முன்பு ஆர்வமுடன் வாக்களித்தனர்.
முதலில் பணியாளர்கள் ஓட்டு போட வந்தவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்தனர். கிருமிநாசினி வழங்கி கைகளை சுத்தப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. வலது கைக்கு கையுறை வழங்கப்பட்டது. முதியவர்கள், மூதாட்டிகளுக்கு பணியாளர்களே பாலித்தீன் கையுறை அணிவித்தனர். முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
நீண்ட வரிசை
வாக்குச்சாவடிக்குள் நுழைந்த பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்று சரிபார்க்கப்பட்டு கையெழுத்து பெறப்பட்டது. இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்பட்டு, ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர். ஊட்டி அருகே தனியார் எஸ்டேட் பகுதியில் தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து வந்து வாக்களித்தனர். நடக்க முடியாத வயதானவர்கள் ஊன்றுகோலுடனும், உறவினர்கள் உதவியுடனும் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போட்டனர்.
ஊட்டி மேரிஸ்ஹில் வாக்குச்சாவடியில் சிலரின் பெயர் வார்டு மறுவரையறையில் வேறு வார்டு, வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் குழப்பம் அடைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
சோலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படுகர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து வாக்களித்தனர். இளம் வாக்காளர்கள், முதியவர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். 55 பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கையை கண்காணிக்க வெப் ஸ்டீரிமிங் செய்யப்பட்டு இருந்தது.
மேலும் 61 நுண் பார்வையாளர்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணித்தனர். தோடர், கோத்தர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் ஆர்வமுடன் வாக்களித்ததை காண முடிந்தது.
கூடலூரில் பரபரப்பு
கூடலூர் பகுதியில் காலை 11 மணிக்கு பிறகு வாக்குப்பதிவு விறுவிறுப்பு அடைந்தது. 2-ம் மைல், அத்திப்பாளி அரசு பள்ளிகள், மேல் கூடலூர், கூடலூர் மற்றும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர். கூடலூர் புத்தூர்வயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் மனநலம் குன்றிய சிலரை ஓட்டு போடுவதற்காக வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்தனர்.
இதற்கு வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தேர்தல் சட்ட விதிகளின்படி மனநலம் குன்றியோர் சார்பில் உடன் வந்த நபர்கள் வாக்களிக்கலாம் என கூறப்பட்டது. பின்னர் மனநலம் குன்றியோர் சார்பில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. அதுபோன்று ஆதிவாசி மக்கள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
போலீசார் குவிப்பு
கோத்தகிரி 2-வது வார்டுக்கு உட்பட்ட திப்பம்பட்டி கிராம பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததை கண்டித்து பொதுமக்கள் தேர்தலை புறக்கணிப்பதாகவும், வாக்களிக்க வருபவர்களை தடுத்து நிறுத்த உள்ளதாகவும் அறிவித்தனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப் பட்டனர்.
கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட கொல்லிமலை பகுதியில் வசிக்கும் கோத்தர் பழங்குடியின மக்கள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிந்தபடி வந்து வாக்களித்தனர். மொத்தத்தில் நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.
Related Tags :
Next Story