பூத் சிலிப் கிடைக்காமல் வாக்காளர்கள் தவிப்பு


பூத் சிலிப் கிடைக்காமல் வாக்காளர்கள் தவிப்பு
x
தினத்தந்தி 19 Feb 2022 10:01 PM IST (Updated: 19 Feb 2022 10:01 PM IST)
t-max-icont-min-icon

பூத் சிலிப் கிடைக்காமல் வாக்காளர்கள் தவிப்பு

திருப்பூர் மாநகராட்சியில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் சரிவர கிடைக்காததால் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டது. வாக்குச்சாவடிக்கு முன்பு இருந்த ஊழியர்களும் பூத் சிலிப்பை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.
பூத் சிலிப் கிடைக்காமல் அவதி
திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளுக்கு கவுன்சிலர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாநகராட்சி பகுதியில் 776 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்களுக்கு அவர்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடியின் பெயர், அமைவிடம் குறித்த விவரங்களுடன் பூத் சிலிப்பை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக வினியோகம் செய்தனர். வாக்காளர்கள் வீட்டில் இல்லாதபட்சத்தில் அவர்களுக்கு வழங்குவதற்காக அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு முன்பு ஊழியர்கள் நேற்று பணியாற்றினார்கள்.
பெரும்பாலான வாக்காளர்கள் பூத் சிலிப் இல்லாமல் வாக்குச்சாவடிக்கு வந்திருந்தனர். வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் ஆதார் கார்டு உள்ளிட்ட 11 ஆவணங்களை கொண்டு வந்த வாக்காளர்களுக்கு பாகம் எண், வரிசை எண் உள்ளிட்ட விவரங்களை கண்டுபிடிக்க முடியாமல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் திணறினார்கள். பின்னர் அருகில் உள்ள கட்சியினரிடம் சென்று பாகம் எண், வரிசை எண் எழுதி வாங்கி வந்தால் பூத் சிலிப்பை வழங்குவதாக கூறி அனுப்பி வைத்ததை காண முடிந்தது. இதுபோல் ஆன்லைன் மூலமாக பூத் சிலிப் விவரம் அறிய இணையதளமுகவரி கொடுக்கப்பட்டது. ஆனால் நேற்று காலை அந்த இணையதளம் முடங்கியதால் பூத் சிலிப் விவரத்தை அறியமுடியவில்லை.
வாக்காளர்கள் சிரமம்
சில வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் காலையில் தாமதமாக பணிக்கு வந்தனர். இதனால் பூத் சிலிப் இல்லாத முதியவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பதற்கு தாமதம் ஏற்பட்டது. பூத் சிலிப் சரிவர வினியோகம் செய்யாததன் விளைவாக வாக்காளர்கள் சிரமம் இன்றி வாக்களிக்க முடியாமல் போனது.

Next Story