விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் வாக்களித்தனர்.
விழுப்புரம்,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகள், அனந்தபுரம், அரகண்டநல்லூர், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
933 வேட்பாளர்கள் போட்டி
இதில் மொத்தமுள்ள 210 கவுன்சிலர் பதவியிடங்களில் விக்கிரவாண்டி பேரூராட்சியில் ஒருவரும், அரகண்டநல்லூர் பேரூராட்சியில் ஒருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளின் 102 நகரமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 515 பேரும், 7 பேரூராட்சிகளின் 106 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 420 பேரும் என 208 பதவியிடங்களுக்கு நடைபெற்ற இத்தேர்தலில் 933 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த 3 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 114 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 53 ஆயிரத்து 590 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 55 பேரும் ஆக மொத்தம் 2 லட்சத்து 97 ஆயிரத்து 759 பேர் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 208 பதவியிடங்களுக்கு 346 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்றது.
நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. இதில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதில் கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.
டோக்கன் வழங்கப்பட்டது
இதற்கிடையே மாலை 5 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாக்களிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. சில இடங்களில் வாக்காளர்கள் அலவலர்களிடம் பிரச்சினையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் அறிவுறுத்தலின்படி வாக்குப்பதிவு செய்ய கூடுதல் நேர அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த வகையில் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள 2 வாக்குச்சாவடிகள், திண்டிவனம் நகராட்சி 6-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி உள்ளிட்ட பல வாக்குச்சாவடிகளில் மாலை 5 மணிக்கு பிறகும் வாக்களிக்க முடியாமல் ஏராளமான வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் அவர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இத்தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் என 1,684 பேரும் மற்றும் 10 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 26 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஈடுபட்டனர்.
வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைப்பு
தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் அடங்கிய வாக்குப்பெட்டிகளுக்கு அந்தந்த நகராட்சி, பேரூராட்சிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.
அதன் பின்னர் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இருந்து இரவு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு அந்தந்த நகராட்சி, பேரூராட்சிகளின் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறைகளில் வாக்குச்சாவடி வாரியாக தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மைய அறைகள் மாவட்ட தேர்தல் பார்வையாளர் லட்சுமி, மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
தேர்தலில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடைபெற ஏதுவாக விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உள்ளூர் போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர்காவல் படையினர் என 1,600 பேர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story