கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் கவச உடையணிந்து வந்து வாக்களித்தார்
தஞ்சையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்தவர் கவச உடையணிந்து வந்து வாக்களித்தார். அவரை மாநகராட்சி வாகனத்தில் அழைத்து வந்து வாக்களிக்க ஏற்பாடு செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்தவர் கவச உடையணிந்து வந்து வாக்களித்தார். அவரை மாநகராட்சி வாகனத்தில் அழைத்து வந்து வாக்களிக்க ஏற்பாடு செய்தனர்.
மாநகராட்சி தேர்தல்
தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தது. மாலை 5 மணிக்கு பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தஞ்சை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் ஒருவர் ஆஸ்பத்திரியிலும், ஒருவர் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருபவர் தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள மருதம் நகரில் வசித்து வருகிறார்.
அவர் நேற்று நடந்த மாநகராட்சி தேர்தலில் வாக்களிக்க விரும்பினார். இதுகுறித்து தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மாலை 5 மணிக்கு பிறகு அவர் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
கவச உடையணிந்து வந்து வாக்களித்தார்
அதன்பேரில் மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், உதவி பொறியாளர் கார்த்திகேயன், சுகாதார ஆய்வாளர் ஸ்டீபன் இளங்கோராஜ் மற்றும் அதிகாரிகள் மாநகராட்சி வாகனத்தில் மருதம் நகரில் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரை அழைத்து வந்தனர்.
அவர் கவச உடையணிந்து 5.30 மணிக்கு வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வருவதையொட்டி வாக்குச்சாவடி மைய அலுவலகத்தில் இருந்த வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள், முகவர்கள் அனைவரும் கொரோனா கவச உடையை அணிந்து இருந்தனர்.
Related Tags :
Next Story