அ.தி.மு.க. முகவரை வாக்குச்சாவடிக்குள் வைத்து பூட்டிய அதிகாரிகள்
அ.தி.மு.க. முகவரை வாக்குச்சாவடிக்குள் வைத்து அதிகாரிகள் பூட்டியதால் சின்னமனூரில் பரபரப்பு ஏற்பட்டது.
சின்னமனூர்:
வாக்குச்சாவடிக்கு பூட்டு
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில், மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு 114 பேர் போட்டியிட்டனர். இதற்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கி மாலை வரை அமைதியாக நடந்தது.
சின்னமனூர் நகராட்சி 13-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான வாக்குப்பதிவு, கணக்குவேலாயி அமராவதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’வைக்கப்பட்டன.
அதன்பிறகு அனைத்து முகவர்களையும் வெளியேறும்படி உத்தரவிட்ட, வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடியை பூட்டினர்.
அ.தி.மு.க. முகவர்
அப்போது, அ.தி.மு.க. முகவர் வாக்குச்சாவடிக்குள் இருந்ததை அதிகாரிகள் கவனிக்கவில்லை. அவரை வாக்குச்சாவடிக்குள் வைத்து அதிகாரிகள் பூட்டி விட்டனர்.
இதனைக்கண்ட தி.மு.க. உள்ளிட்ட பிற கட்சியினர் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் பறக்கும் படையினர் அங்கு விரைந்தனர். பின்னர் அவர்கள், தி.மு.க. மற்றும் பிற கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகளின் கவனக்குறைவால் நடந்த பிரச்சினையே தவிர, இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், ‘சீல்’ வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரத்தை எக்காரணம் கொண்டும் திறக்க முடியாது என்றும் அவர்கள் கூறினர். இதனையடுத்து தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story