திருக்கோவிலூரில் 2 வாக்குச்சாவடி மையங்களில் தி மு க வினர் போலீசாரிடம் திடீர் வாக்குவாதம்


திருக்கோவிலூரில் 2 வாக்குச்சாவடி மையங்களில் தி மு க வினர் போலீசாரிடம் திடீர் வாக்குவாதம்
x
தினத்தந்தி 19 Feb 2022 10:53 PM IST (Updated: 19 Feb 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் தி மு க வினர் போலீசாரிடம் திடீர் வாக்குவாதம் செய்தனர். சந்தைப்பேட்டையில் அ தி மு க மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது


திருக்கோவிலூர்

தி.மு.க.வினர் வாக்குவாதம்

திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலையிலுள்ள வாசவி உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த போலீசார் வாக்காளர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதை அறிந்து தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் குணா என்கிற குணசேகர் வாக்குப்பதிவு செய்ய வரும் வாக்காளர்களை ஏன் மிரட்டுகிறீர்கள்? என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைப்பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சக போலீஸ்காரர்களும் ஓடி வந்து இருவரையும் சமாதானம் செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீசாரை தனியாக அழைத்துச் சென்றனர். இதனால் வாக்குச்சாவடி மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வடக்கு வீதி

அதேபோல் திருக்கோவிலூர் வடக்கு வீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் முதியோர் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் உறவினர்கள் வாகனங்களில் அழைத்து வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் இருந்து நடந்து தான் வரவேண்டும் என்றனர். இதை கண்ட தி.மு.க.வினர் போலீசாரிடம் உடல் நிலை சரியில்லாதவர்கள் மற்றும் முதியோர்களிடம் ஏன் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்கிறீர்கள் அவர்களை வெகுதூரம் நடக்க வைத்து ஏன்? கொடுமைப்படுத்துகிறீர்கள் என வாக்குவாதம் செய்ததோடு வடக்குத் தெருவில் வாக்குச்சாவடி மையம் அருகே ரோட்டின் குறுக்கே அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த போலீஸ் அதிகாரிகள் தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர். என்றாலும் போலீசாரின் செயலை கண்டித்து தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் முருகன், தி.மு.க.வினரை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். 

சந்தைப்பேட்டை

23-வது வார்டுக்குட்பட்ட சந்தைப்பேட்டை வாக்குச்சாவடி மையத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வாக்குச்சாவடி மையத்திலேயே தி.மு.க.வினர் வாக்கு கேட்பதாக அ.தி.மு.க.வினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர் குற்றச்சாட்டு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி சாலை வரை சென்றதால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தி.மு.க.வினர் இதேபோல் வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் விதிகளை மீறி கட்சி துண்டுகளை அணிந்து வந்து வாக்கு கேட்டதாக அ.தி.மு.க.வினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் குற்றம் சாட்டினர்.





Next Story