கள்ளஓட்டு போட்டு விட்டதாக கூறி வாலிபர் அதிகாரிகளிடம் வாக்குவாதம்


கள்ளஓட்டு போட்டு விட்டதாக கூறி வாலிபர் அதிகாரிகளிடம் வாக்குவாதம்
x
தினத்தந்தி 19 Feb 2022 11:58 PM IST (Updated: 19 Feb 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி நகராட்சி 20-வது வார்டில் ஓட்டுப்போடவந்த வாலிபர் ஒருவர், தனது ஓட்டை யாரோ கள்ளஓட்டாகப் போட்டுச் சென்று விட்டதாகக் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தாா். இதனால் சிறிதுநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

ஆரணி

ஆரணி நகராட்சி 20-வது வார்டில் ஓட்டுப்போடவந்த வாலிபர் ஒருவர், தனது ஓட்டை யாரோ கள்ளஓட்டாகப் போட்டுச் சென்று விட்டதாகக் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தாா். இதனால் சிறிதுநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

23 வயது வாலிபர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. ஆரணி நகராட்சி 20-வது வார்டில் சூரிய குளம் அருகே உள்ள முஸ்லிம் பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு நேற்று மதியம் 1.20 மணியளவில் 23 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஓட்டுப்போட வந்தார்.

அவரின் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டு இருப்பதாக, அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவர், நான் ஏற்கனவே ஓட்டுப்போடவில்லை, இப்போது தான் வருகிறேன், என்றார். அவரின் பேச்ைச ஏற்காத அதிகாரிகளும், முகவர்களும் அந்த வாலிபரை அங்கிருந்து வெளியேறும்படி கூறினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் சமரசம்

உடனே அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி மற்றும் போலீசார் அங்குக் குவிக்கப்பட்டனர். ஓட்டுப்போட வந்த வாலிபர், என்னுடைய ஓட்டை யாரோ கள்ள ஓட்டாகப் போட்டுச் சென்று விட்டனர், பூத் சீலிப் முறையாக வழங்கப்படாததால் கையில் எழுதப்பட்ட சீட்டுகளை கொண்டு வந்து ஓட்டுப்போடுகிறார்கள், இதுபோன்ற நடவடிக்கையால் தான் குளறுபடி ஏற்பட்டுள்ளது, எனக் கூறி அரைமணி நேரம் வாக்குச்சாவடி மையத்தில் அதிகாரிகளிடமும், முகவர்களிடமும் வாக்குவாதம் செய்தார்.

இதனால் அங்கு சிறிது ேநரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. போலீசார், அவர்கள் அனைவரையும் சமரசம் செய்தனர். அதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது.

கள்ள ஓட்டு...

ஆரணி நகராட்சி 16-வது வார்டு சைதாப்பேட்டை நாயக்கன்பாளையத்துக்கு போகும் வழியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் நேற்று மாலை 31 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கள்ள ஓட்டு போட வந்ததாகத் தெரிகிறது. 

அப்பகுதியில் சுற்றி சுற்றி வந்த அவரை தி.மு.க. வேட்பாளர் மடக்கி பிடித்து ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரனிடம் ஒப்படைத்தார்.

அவரிடம் விசாரித்த போது, ஏ.ேக.படவேடு பகுதியைச் சேர்ந்த சங்கர் (வயது 31) என்றும், வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஒருவரிடம் நெசவுத்தொழில் செய்து வருவதும் தெரிய வருகிறது. அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 மற்றொரு சம்பவம்

செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சி பரிதிபுரம் மேற்கு நடுநிலைப்பள்ளியில் 16-வது வார்ைட சேர்ந்த வீரமணி என்பவரது மனைவி கவிதா வாக்களிக்க வரிசையில் காத்திருந்தார்.

பின்னர் அவர் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்த போது, ஏற்கனவே வாக்கு பதிவாகியுள்ளது என கூறியதால் அதிர்ச்சி அடைந்தார். 
இதை அறிந்த தி.மு.க. ஏஜெண்டுகள் மற்றும் வேட்பாளரின் ஆதரவாளர்கள், அ.தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்டதாக கூறினர். இதனால் இருகட்சிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பான சூழ்நிலை உருவானது. 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜா காளீஸ்வரன், செய்யாறு சரக துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு வந்து வாக்குச்சாவடி முன் கூடியிருந்த இருகட்சியினரையும் அப்புறப்படுத்தினர். 

 மாலை 5 மணிக்கு மேல்...

இந்த நிலையில் வாக்குச்சாவடி மையத்தில் மாலை 5 மணி அளவில் வாக்குப்பதிவு நேரம் முடிந்தவுடன் பள்ளி வளாகத்திற்குள் இருந்த வாக்காளர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு கேட்டு பூட்டப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல் வந்த வாக்காளர்கள் தங்களை அனுமதிக்க வேண்டுமென ஒரு சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி வலியுறுத்தினர். 

அப்போது வாக்காளர்களுக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடமும், தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

 வாக்குவாதம்

மாலை 5 மணிக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் மட்டும் சான்றிதழ் காண்பித்தால் அனுமதிக்கப்படுவது தவிர மற்ற வாக்காளருக்கு அனுமதி இல்லை என தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவித்தனர். 

அப்போது அதற்கான அரசாணை காண்பித்தால் மட்டுமே அங்கிருந்து செல்வோம் என சில வாக்காளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து போலீசார் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் சிலிப் ஒன்றினை காண்பித்து அதில் தெளிவாக குறிப்பிட்டுள்ளதை படித்து பார்த்துக் கொள்ளுங்கள் என வலியுறுத்தினர்.

அதில் மாலை 5 மணிக்கு மேல் கொரோனா பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் மட்டுமே அனுமதி என குறிப்பிட்டு இருந்ததால் வாக்காளர்கள் மற்றும் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story