கரூர் மாநகராட்சி, குளித்தலை நகராட்சியில் வாக்குப்பதிவு தாமதம்
ஓட்டை மாற்றி போட்டவர்களால் கரூர் மாநகராட்சி, குளித்தலை நகராட்சியில் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது.
கரூர்,
கரூர் மாநகராட்சி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கரூர் மாவட்டத்தில் நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தநிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையத்தில் உள்ள புனித மரியன்னை உதவிபெறும் ஆரம்பப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் வாக்குச்சாவடி எண்.38-ல் பாலசுப்பிரமணி என்பவர் வாக்களிக்க வந்தார். அப்போது அவரது வாக்கு செலுத்தப்பட்டு விட்டது என தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அலுவலரிடம் முறையிட்டார்.
வாக்குவாதம்
இதனைத்தொடர்ந்து தலைமை அலுவலர் விசாரித்ததில் பாலசுப்பிரமணியின் வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அவருக்கு மாற்று ஏற்பாடாக, வாக்குச்சீட்டில் வாக்குப்பதிவு செய்யலாம் என தலைமை அலுவலர் கூறியுள்ளார். இதனை ஏற்காத பாலசுப்பிரமணி வாக்கு எந்திரத்தில்தான் வாக்களிப்பேன் என அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த வாக்குச்சாவடியில் மாலை 5.45 மணியளவில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
பின்னர் பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பாலசுப்பிரமணியனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர் சமாதானம் ஆகாததால், அவரை காத்திருக்க கூறினர்.
இதனைத்தொடர்ந்து மாலை 6.50 மணியளவில் அந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க காத்திருந்த 26 பேர் மீண்டும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
எந்திரங்களுக்கு சீல்
இந்தநிலையில் வாக்குச்சாவடியில் காத்திருந்த பாலசுப்பிரமணி அங்கிருந்து கிளம்பி சென்றார். இதையடுத்து, இரவு 7.15 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்து வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பாலசுப்பிரமணி என்ற பெயரில் உள்ள வேறொருவர் மாற்றி வாக்களித்து சென்றுவிட்டதாக தெரிவித்தார்.
குளித்தலை நகராட்சி
குளித்தலை நகராட்சி 8-வது வார்டு பகுதியை சேர்ந்த வாக்காளர் சண்முகம் என்பவர் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிப்பதற்காக நேற்று வந்தார். அப்போது அவரது வாக்கை ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது வாக்கை வேறு ஒரு நபர் எப்படி போட முடியும் என்று அதிகாரிகளிடம் கேட்டபோது அதிகாரிகளிடமிருந்து முறையான பதில் தரவில்லை.
இதன்பின்னர் அவரை தேர்தல் அலுவலர்கள் சிறிது நேரம் காத்திருக்க கூறியுள்ளனர். பின்னர் இதுகுறித்து வாக்காளர் பெயர் பட்டியலைப் பார்த்தபோது சண்முகம் என்ற பெயரில் வேறொரு நபர் இருப்பதும் அந்த நபர் இந்த சண்முகத்தின் பெயரில் வாக்கு செலுத்தி விட்டு சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
வாக்குச்சீட்டு வினியோகம்
இதையடுத்து ஏற்கனவே வாக்கை செலுத்தி விட்ட சண்முகத்தின் பெயரில் வாக்கு செலுத்தாமல் இருந்த சண்முகத்தை வாக்களிக்க செய்தனர். பின்னர் அவர் வாக்கை செலுத்தி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதில் தந்தை பெயரை மாற்றி வாக்குச்சீட்டு வினியோகம் செய்யப்பட்டதும், சரியான நபரை அடையாளம் காணாமல் வாக்களிக்க வைத்ததுமே காரணம் என்று கூறப்படுகிறது. இருந்த போதிலும் ஒரே பெயராக இருந்த காரணத்தால் நபர்களை மாற்றி மாற்றி வாக்களிக்க வைத்தவிதம் சரியான ஒரு முறை அல்ல என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
Related Tags :
Next Story