முதியவரிடம் சின்னத்தை மாற்றி வாக்களிக்க கூறிய பெண் அலுவலரால் பரபரப்பு
பூதப்பாண்டி பேரூராட்சியில் ஓட்டுப்போட வந்த முதியவரிடம் சின்னத்தை மாற்றி வாக்களிக்கும் படி தேர்தல் பெண் அலுவலர் கூறியதால் 50 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அழகியபாண்டியபுரம்,
பூதப்பாண்டி பேரூராட்சியில் ஓட்டுப்போட வந்த முதியவரிடம் சின்னத்தை மாற்றி வாக்களிக்கும் படி தேர்தல் பெண் அலுவலர் கூறியதால் 50 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திட்டுவிளை அரசுப்பள்ளி
பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளையில் 1-வது வார்டுக்கு அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. காலை 7 மணியில் இருந்து வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து விட்டு சென்றனர். அந்த வார்டில் சுயேச்சை வேட்பாளராக மரிய அற்புதம் என்பவர் தென்னைமர சின்னத்தில் போட்டியிட்டார்.
சின்னத்தை மாற்றி...
காலை 11.15 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த 85 வயது முதியவர் தனது உறவினர் துணையுடன் வாக்களிக்க வந்தார். அப்போது, வாக்குப்பதிவு செய்யும் அறையில் வாக்காளர்களின் அடையாள அட்டை பதிவு செய்யும் ஒரு பெண் அலுவலர் இருந்தார்.
இதையடுத்து வாக்களித்து விட்டு வெளியே வந்த முதியவர் அங்கு நின்றவர்களிடம் தான் தென்னைமரம் சின்னத்தில் வாக்களிக்க வந்ததாகவும், ஆனால், மையத்தில் இருந்த பெண் அலுவலர் தன்னை கை சின்னத்தில் ஓட்டுப்போட சொன்னதாகவும் கூறினார்.
வாக்குப்பதிவு நிறுத்தம்
இதை கேட்ட சுயேச்சை வேட்பாளர் மரிய அற்புதம், உடனே சம்பந்தப்பட்ட பெண் அலுவலரிடம் ‘எப்படி சின்னத்தை மாற்றி வாக்களிக்க கூறலாம்’ என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைகேட்டு மையத்தில் இருந்த மற்ற கட்சியை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் அந்த அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன் வாக்குப்பதிவும் நிறுத்தி வைக்கப்பட்டது.
தகவல் அறிந்த தேர்தல் நடத்தும் பூதப்பாண்டி மண்டல அலுவலர் சங்கரநாராயணன், அலுவலர் செந்தில்குமார், தேர்தல் பார்வையாளர் ஜோஸ் மற்றும் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புகார் மனு
அப்போது, சுயேச்சை வேட்பாளர் மரிய அற்புதத்திடம் இதுபற்றி புகார் மனு அளிக்கும்படியும், அதன் அடிப்படையில் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமராவை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதன்படி மரிய அற்புதம் தேர்தல் அலுவரிடம் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் இதேபோல் வாக்களிக்க வந்த 20 பேரிடம் அந்த அலுவலர் சின்னத்தை மாற்றி வாக்களிக்க செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் சமாதானமாக சென்றனர். அதைதொடர்ந்து 50 நிமிடத்துக்கு பிறகு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.
Related Tags :
Next Story