தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்
களக்காடு, விக்கிரமசிங்கபுரம் அருகே ஓட்டுப்போடாமல் தேர்தலை கிராம மக்கள் புறக்கணித்தனர்.
களக்காடு:
களக்காடு, விக்கிரமசிங்கபுரம் அருகே ஓட்டுப்போடாமல் தேர்தலை கிராம மக்கள் புறக்கணித்தனர்.
வார்டு மறுசீரமைப்பு
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை கிராமத்தில் சுமார் 950 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த தேர்தல் வரை கீழப்பத்தை தனிவார்டாக செயல்பட்டு வந்தது. தற்போது, களக்காடு பேரூராட்சியானது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால் வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இதில் தனிவார்டாக இருந்த கீழப்பத்தை 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, வெவ்வேறு வார்டுகளுடன் இணைக்கப்பட்டது.
இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். நேற்று முன்தினம் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் புறக்கணிப்பு
இந்த நிலையில் களக்காடு நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து சென்றனர்.
ஆனால் கீழப்பத்தையில் கிராம மக்கள் வார்டு மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தி நேற்று தேர்தலை புறக்கணித்தனர். இதனால் அங்குள்ள 950 வாக்காளர்கள் ஓட்டு போட வாக்குச்சாவடிகளுக்கு செல்லவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மற்றொரு சம்பவம்
இதேபோல் மணிமுத்தாறு பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. கடந்த தேர்தலின்போது, இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள ஆலடியூர் கீழ்ப்பகுதி 12-வது வார்டாக இருந்தது. இந்த கிராமத்தில் 300-க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.
வார்டுகள் மறுசீரமைப்பின் போது 12-வது வார்டு 5-வது வார்டுடன் இணைக்கப்பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று யாரும் ஓட்டுப்போட செல்லாமல் கருப்புக்கொடியை கட்டி தேர்தலை புறக்கணித்தனர்.
பேச்சுவார்த்தை
இதையறிந்த அரசு அதிகாரிகள், போலீசார் அங்கு சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அப்பகுதி மக்கள் சமாதானம் அடையாமல் வாக்களிக்க மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த அளவில் மக்கள் வசிப்பதாக கூறி எங்களது வார்டை மற்றொரு வார்டில் இணைத்துள்ளனர். மேலும் எங்களின் வார்டானது தாழ்த்தப்பட்ட பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது, தற்போது இணைத்துள்ள 5-வது வார்டு பொதுப்பிரிவுக்குரியது.
இதனால் நாங்கள் வாக்களிக்கவோ, மனுக்கொடுக்கவோ 5-வது வார்டு பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்த அளவிலான பொதுமக்கள் வசிக்கும் மற்ற வார்டுகள் தனித்தனியாக இருக்கும் போது எங்கள் பகுதியை மட்டும் வேறு வார்டுக்கு மாற்றம் செய்து இருப்பதால் நாங்கள் கருப்புக் கொடி கட்டி தேர்தலைப் புறக்கணித்துள்ளோம்” என்றனர்.
Related Tags :
Next Story