வாக்கு செலுத்த வந்தவரை போலீசார் அனுமதிக்காததால் தர்ணா


வாக்கு செலுத்த வந்தவரை போலீசார் அனுமதிக்காததால் தர்ணா
x
தினத்தந்தி 20 Feb 2022 1:42 AM IST (Updated: 20 Feb 2022 1:42 AM IST)
t-max-icont-min-icon

வாக்கு செலுத்த வந்தவரை போலீசார் அனுமதிக்காததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள லெப்பைக்குடிகாடு நடுத்தெருவைச் சேர்ந்தவர் அஸிஸ்யுல்லா(வயது 28). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேர்தலையொட்டி ெலப்பைக்குடிகாடு கிராம நிர்வாக அலுவலகம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 7, 8, 12, 13 ஆகிய வார்டுகளுக்கான வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் லெப்பைக்குடிகாடு பேரூராட்சி பகுதியில் வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்னர் கொரோனா பாதித்த நபர்கள் வாக்கு செலுத்தும் நேரத்தில் மாலை 5.21 மணிக்கு அஸிஸ்யுல்லா தனது வாக்கை செலுத்த வந்ததாக கூறப்படுகிறது. அப்போது வாக்குச்சாவடி மையத்தின் முன்கதவு பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம், நான் ஓட்டுப்போட வேண்டும், கதவை திறந்து விடுங்கள் என்று அஸிஸ்யுல்லா கேட்டார். அதற்கு போலீசார், வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்னர் வந்துள்ளீர்கள், அதனால் அனுமதிக்க இயலாது. தற்போது கொரோனா பாதித்த நபர்கள் வாக்கு செலுத்தும் நேரமாகும். தாங்கள் கொரோனா பாதித்த நபர் என்றால் சான்றிதழை காண்பித்துவிட்டு வாக்களிக்கச் செல்லுங்கள், என்றனர்.அதற்கு அவர், அந்த சான்றிதழ் எதுவும் என்னிடம் இல்லை. நீங்கள் வேண்டுமானால் பரிசோதித்துக் கொள்ளுங்கள், என்றார். மேலும், அரசு 6 மணி வரை ஓட்டு போடலாம் என்று கூறியுள்ளது. நான் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளேன். என்னை அனுமதிக்க வேண்டும் என்று பிடிவாதமாக கூறினார். போலீசார் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவர் கேட்காமல் போலீசாரிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்து தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் திடீரென பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஓடிச்சென்று, கதவை தள்ளிவிட்டு வாக்குச்சாவடி அருகே சென்றார். அவரை பின்தொடர்ந்து சென்ற போலீசார், அவரை மடக்கி பிடித்து வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே அழைத்து வந்தனர். பின்னர் போலீசார் அஸிஸ்யுல்லாவை வேனில் ஏற்றி வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் போலீசாரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரை விடுவித்தனர். இதனால் ெலப்பைக்குடிகாடு பேரூராட்சியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story