20 கிலோமீட்டர் பயணித்து வாக்களித்த மலைவாழ் மக்கள்
இஞ்சிகுழியில் இருந்து காரையாறுக்கு 20 கிலோ மீட்டர் பயணித்து மலைவாழ் மக்கள் வாக்களித்தனர்.
விக்கிரமசிங்கபுரம்:
இஞ்சிகுழியில் இருந்து காரையாறுக்கு 20 கிலோ மீட்டர் பயணித்து மலைவாழ் மக்கள் வாக்களித்தனர்.
மலைவாழ் மக்கள்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதில் 12-வது வார்டில் மேற்கு தொடர்ச்சி மலை காரையாறு அணை பகுதிக்கு மேலுள்ள இஞ்சிகுழி கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்களில் 20 பேருக்கு ஓட்டுரிமை உள்ளது.
அவர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக நேற்று முன்தினம் காலையிலே தங்களது ஊரில் இருந்து புறப்பட்டனர். 12 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதியில் நடந்தும், பின்னர் 8 கிேலா மீட்டர் தூரம் அணையில் சங்காடம் எனும் மூங்கிலால் அடுக்கப்பட்ட படகில் பயணித்தும் இரவில் காரையாறு வந்தனர்.
20 கிலோ மீட்டர் பயணித்து...
பின்னர் நேற்று காலையில் காரையாறு வாக்குச்சாவடியில் மலைவாழ் மக்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், ‘நாங்கள் 20 கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஜனநாயக கடமையை ஆற்றியதில் மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் எங்களுக்கு வனத்துறை சார்பில் படகு வசதி செய்து தந்தால், அத்தியாவசிய தேவைக்கு எளிதில் காரையாறுக்கு வந்து செல்ல உதவியாக இருக்கும்’ என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story