கர்நாடக சட்டசபையில் 3-வது நாளாக காங்கிரசார் உள்ளிருப்பு போராட்டம்
ஈசுவரப்பாவிடம் இருந்து மந்திரி பதவியை பறிக்க வலியுறுத்தி சட்டசபையில் 3-வது நாளாக காங்கிரஸ் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு ராகுல்காந்தி, காங்கிரஸ் மேலிட தலைவர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
பெங்களூரு:ஈசுவரப்பாவிடம் இருந்து மந்திரி பதவியை பறிக்க வலியுறுத்தி சட்டசபையில் 3-வது நாளாக காங்கிரஸ் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு ராகுல்காந்தி, காங்கிரஸ் மேலிட தலைவர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
சட்டசபை முடக்கம்
கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மந்திரி ஈசுவரப்பா, டெல்லி செங்கோட்டையில் ஒருநாள் காவி கொடி ஏற்றப்படும் நிலை வரும் என்று கருத்து தெரிவித்திருந்தர். இதையடுத்து, தேசிய கொடியை அவமதித்து விட்டதாக மந்திரி ஈசுவரப்பா மீது காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள். மேலும் தேசிய கொடியை அவமதித்த ஈசுவரப்பாவிடம் இருந்து மந்திரி பதவியை பறிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் ஈசுவரப்பாவிடம் இருந்து மந்திரி பதவியை பறிக்க வலியுறுத்தி சட்டசபை கூட்டத்தொடரிலும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தினார். ஆனால் மந்திரி பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று ஈசுவரப்பா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக சட்டசபை மற்றும் மேல்-சபை கடந்த 2 நாட்களாக முடக்கப்பட்டது.
3-வது நாளாக போராட்டம்
மேலும் ஈசுவரப்பாவை பதவி நீக்கம் செய்ய கோரி, கடந்த 17-ந் தேதியில் இருந்து சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். விதானசவுதாவிலேயே காங்கிரஸ் உறுப்பினர்கள் கடந்த 2 நாட்களாக தூங்கி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று 3-வது நாளாக காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள்.
நேற்று முன்தினம் சட்டசபையிலேயே படுத்து தூங்கிய உறுப்பினர்கள், நேற்று காலையில் எழுந்ததும் விதானசவுதா வளாகத்தில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டனர். பின்னர் அங்கேயே காலை உணவையும் சாப்பிட்டார்கள். நாளை (திங்கட்கிழமை) வரை உள்ளிருப்பு போராட்டத்தை தொடர காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலிட தலைவர்கள் ஆதரவு
இந்த நிலையில், மந்திரி ஈசுவரப்பாவை நீக்க கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பற்றி மேலிட தலைவர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது. தேசிய கொடியை ஈசுவரப்பா அவமதித்த விவகாரத்தை தேசிய அளவில் கொண்டு செல்ல காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இதன்காரணமாக உள்ளிருப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளித்து, போராட்டத்தை தொடரும்படி தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சித்தராமையா, டி.கே.சிவக்குமாருடன் செல்போனில் கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தொடர்பு கொண்டு பேசி, போராட்டத்தை தொடரும்படி கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபோல், ராகுல்காந்தியும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
பா.ஜனதாவுக்கு நெருக்கடி கொடுக்க...
இந்த விவகாரத்தை தேசிய அளவில் கொண்டு சென்று பா.ஜனதாவுக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன்காரணமாக சட்டசபை கூட்டத்தொடர் முடியும் வரை காங்கிரஸ் கட்சியினர் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை தொடரலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் சட்டசபையை முடக்கி போராட்டம் நடத்தி வரும் காங்கிரஸ் தலைவர்கள் மீது சபாநாயகர் காகேரி கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
Related Tags :
Next Story