தென்காசியில் அமைதியாக நடந்த உள்ளாட்சி தேர்தல்
தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தல்
தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று அமைதியாக நடைபெற்றது. மாவட்டத்திலுள்ள தென்காசி, கடையநல்லூர் செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில், சுரண்டை ஆகிய 6 நகராட்சிகளுக்கும், குற்றாலம், மேலகரம், இலஞ்சி, அச்சன்புதூர், வடகரை கீழ்பிடாகை, எஸ்.புதூர், ஆய்க்குடி, சாம்பவர்வடகரை, சுந்தரபாண்டியபுரம், கீழப்பாவூர், திருவேங்கடம், ராயகிரி, ஆலங்குளம், ஆழ்வார்குறிச்சி, சிவகிரி, வாசுதேவநல்லூர், பண்பொழி ஆகிய பேரூராட்சிகளுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது.
பொதுமக்கள் ஆர்வம்
காலையில் இருந்ேத பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
தென்காசி சிந்தாமணி ஆனந்தா தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் ராஜா எம்.எல்.ஏ. வாக்களித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. ஒரு சில வாக்குச்சாவடிகளில் பல்வேறு காரணங்களுக்காக வாக்குவாதங்கள் நடைபெற்றன. பிரச்சினைகள் ஏற்பட்ட இடத்தில் உடனடியாக போலீசார் வந்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் வாக்குப்பதிவு தடையின்றி நடைபெற்றது.
திடீர் சலசலப்பு
இதற்கிடையே தென்காசி மேல முத்தாரம்மன் கோவில் தெரு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று காலை அதே பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் வாக்களிக்க வந்தார். அப்போது அவர் பாரதீய ஜனதா கட்சி வேட்டியை அணிந்து வந்தார். அப்போது அங்கிருந்த தேர்தல் அலுவலரும், போலீசாரும் அவருக்கு வாக்களிக்க அனுமதி மறுத்தனர். இதனால் அவர் திரும்பிச் சென்று விட்டார். பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே போன்று வந்தார்.
அப்போதும் அவரை அனுமதிக்க மறுத்தனர். அவர் அதிகாரிகளிடம் வாதிட்டார். அந்த நேரத்தில் அங்கு அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு தொண்டர் வந்து அவர் கரை வேட்டி கட்டி வந்தால் நான் அ.தி.மு.க. துண்டை அணிந்து வருவேன். எல்லோருக்கும் சட்டம் ஒன்று தான். அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் அனைவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story