ஜனநாயக கடமையை ஆற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது; முதல் வாக்காளர்கள் உற்சாக பேட்டி
ஜனநாயக கடமையை ஆற்றியது மகிழ்ச்சி அளிப்பதாக முதல் வாக்காளர்கள் உற்சாக பேட்டி அளித்தனர்.
ஈரோடு
ஜனநாயக கடமையை ஆற்றியது மகிழ்ச்சி அளிப்பதாக முதல் வாக்காளர்கள் உற்சாக பேட்டி அளித்தனர்.
முதல் வாக்காளர்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. வாக்காளர்கள் ஆர்வமாக வந்து ஓட்டுப்போட்டனர். இதனால் அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் பரபரப்பாக காணப்பட்டது. இந்தநிலையில் புதிதாக வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை இணைத்து கொண்டவர்கள் முதல் வாக்கை பதிவு செய்ய வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்தனர்.
முதல் முறையாக தேர்தலில் தங்களது பங்களிப்பை செலுத்தும் உணர்வுடன் வந்த அவர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர்களும் வாக்களிப்பது தொடர்பாக முறையாக வழிகாட்டினார்கள். தங்களது வாக்கை பதிவு செய்துவிட்டு, மை வைத்த விரலை உற்சாகமாக உயர்த்தி காட்டியபடி முதல் வாக்காளர்கள் மகிழ்ச்சியுடன் வெளியே வந்ததை காணமுடிந்தது.
ஜனநாயக கடமை
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிரோடு மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் முதல் முறையாக வாக்களிக்க வந்த அன்சுசர்மா (வயது 20) கூறியதாவது:-
எனது வாக்கை முதல் முறையாக பதிவு செய்ய வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தனை மக்கள் ஆர்வமாக வந்து வாக்களிப்பதை காண ஆச்சரியமாக உள்ளது. அவர்களுடன் சேர்ந்து நானும் வரிசையில் நின்று எனது வாக்கை பதிவு செய்தேன். முதல் முறையாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எனது வாக்கை பதிவு செய்தது வித்தியாசமாக இருந்தது. நானும் ஜனநாயக கடமையை ஆற்றியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வித்தியாசமான அனுபவம்
இதேபோல் முதல் வாக்குப்பதிவு செய்ய வந்த சர்மிளாதேவி (20) கூறியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே நான் ஓட்டு போடுவதற்காக மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த தேர்தலில் முதல் வாக்கை செலுத்த வாய்ப்பு கிடைத்து உள்ளது. நகர்ப்புற தேர்தலில் எனது வாக்கை பதிவு செய்ததன் மூலம் ஜனநாயக கடமையாற்றி இருப்பது மகிழ்ச்சியுடன் கலந்த வித்தியாசமான அனுபவமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் தங்களது முதல் வாக்கை உற்சாகமாக பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story