நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஈரோடு மாவட்டத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது; நீண்டவரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடந்தது. வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் நீண்டவரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குப்பதிவு செய்தனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடந்தது. வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் நீண்டவரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குப்பதிவு செய்தனர்.
கோபி
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் தேர்தல் நடந்தது.
கோபி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் 59 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்பட்டு வாக்குச்சாவடியில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சென்று வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். பின்னர் வாக்காளர்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையாக நின்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர்.
கோபி நகர பகுதியில் நேற்றுக்காலை பனி மூட்டம் குளிர் நிலவியது. எனினும் அதை பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து வாக்களித்தனர்.
கோபி பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கூடத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போடுவதற்காக 100 வயது உடைய ராமாயம்மாள் என்ற மூதாட்டி காலையிலேயே வந்தார். பின்னர் அவர் அங்கு தன்னுடைய ஓட்டை பதிவு செய்து விட்டு சென்றார்.
இதையொட்டி கோபி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கோபி போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கும் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அதுமட்டுமின்றி கோபி நகராட்சியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களையும் தேர்தல் பார்வையாளர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதேபோல் லக்கம்பட்டி, காசிபாளையம், கொளப்பலூர், கூகலூர் ஆகிய பேரூராட்சிகளில் வாக்காளர்கள் அந்தந்த வாக்கு சாவடிகளில் வரிசையாக நின்று தங்கள் ஓட்டை பதிவு செய்து சென்றனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாக 4 சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
சத்தியமங்கலம்-புஞ்சைபுளியம்பட்டி
சத்தியமங்கலம் நகராட்சியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதற்காக சில முதியவர்கள் மற்றும் மூதாட்டிகள் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு வாக்களிக்க வந்தனர்.
இதற்காக அவர்கள் நான்கு சக்கர வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பழுது காரணமாக ஏற்பட்ட தாமதம் தவிர மற்ற வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. மொத்தம் 19 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 10-ஆவது வார்டில் மட்டுமே ஆண்கள் மற்றும் பெண்கள் என வாக்களிக்க 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களுடைய வாக்கை பதிவு செய்தனர்.
புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள வி.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரம் தொடக்கப்பள்ளி, சத்தி ரோட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
சென்னிமலை
சென்னிமலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக சென்னிமலையில் வடக்கு ராஜவீதி, காமராஜர் நகர் மற்றும் அம்மாபாளையம் ஆகிய 3 இடங்களில் மொத்தம் 16 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நேற்று காலையில் 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கினாலும், காலை 10 மணிக்கு மேல் தான் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க சென்றனர். இதனால் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். தேர்தல் நடத்தும் அலுவலரும், சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலருமான ஆயிஷா அனைத்து வாக்கு சாவடிகளுக்கும் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னிமலை பேரூராட்சி பகுதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
காமராஜர் நகர் உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மொத்தம் 813 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 303 பேரும், பெண்கள் 303 பேரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர். இதையொட்டி சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் வாக்கு சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சிவகிரி- அந்தியூர்
சிவகிரி பேரூராட்சி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தங்களுடைய வாக்கை பதிவு செய்து சென்றனர்.
சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் காலை முதலே இளைஞர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
அந்தியூர் பேரூராட்சியில் வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணி முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்தனர்.
கொடுமுடி
கொடுமுடி, சென்னசமுத்திரம், வெங்கம்பூர் ஆகிய பேரூராட்சிகளில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. இதில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் வெங்கம்பூர் பேரூராட்சியில் ஒருவரும், சென்னசமுத்திரம் பேரூராட்சியில் 2 பேரும் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் மீதம் உள்ள 42 வார்டுகளுக்கான பேரூராட்சி தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. எந்தவித அசம்பாவிதமும் இன்றி தேர்தல் அமைதியாக நடந்தது.
குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிகளுக்கு வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து வாக்களிக்க வசதியாக நான்கு சக்கர வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதில் மாற்றுத்திறனாளிகள் உட்கார்ந்து வந்து தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர்.
அமைதியான முறையில்..
இதையொட்டி கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடந்தது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை பதிவு செய்தனர்.
பவானி
பவானியில் உள்ள 27 வார்டுகளில் 36 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்தனர்.
பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நிறைமாத கர்ப்பிணிகள் 2 பேர், மற்றும் ஒரு மாற்றுத்திறனாளி ஆகியோர் வரிசையில் காத்து நின்று தங்களுடைய வாக்கை பதிவு செய்தனர்.
இதேபோல் பவானியை அடுத்த ஜம்பை, சித்தோடு, நசியனூர் ஆகிய பேரூராட்சிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
Related Tags :
Next Story