தேர்தல் தொடர்பான புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைப்பு; ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பேட்டி
தேர்தல் தொடர்பான புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறினார்.
ஈரோடு
தேர்தல் தொடர்பான புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறினார்.
கூடுதல் பாதுகாப்பு
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 769 பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டம் முழுவதும் 1,219 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 4 ஆயிரத்து 876 வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றினார்கள். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
மாலை 5 மணிக்கு பிறகு கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 184 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கண்காணிப்பு கேமரா
ஈரோடு அக்ரஹார வீதி மகாஜன பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி உட்பட பல்வேறு வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்ட ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,219 வாக்குச்சாவடிகளிலும் காலை முதல் தேர்தல் அமைதியாக நடந்து வருகிறது. பதற்றமான, 82 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 184 வாக்குச்சாவடிகளில் வழக்கமான தேர்தல் அலுவலர்கள், போலீசார் தவிர, கூடுதலாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 பேர் பாதுகாப்பு பணி செய்கின்றனர். அங்கு நுண் பார்வையாளர்கள் செயல்படுவார்கள். மேலும் வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை தேர்தல் குறித்து 3 முறைகேடு புகார்கள் வந்தன. அது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஏதும் புகார் இல்லை. இருப்பினும், புகார்கள் தெரிவிக்கும்பட்சத்தில் அதனை உடன் விசாரிக்க, தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்குவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story