8 வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டன.
பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
திருவண்ணாமலை நகராட்சிக்கு திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியிலும், ஆரணி நகராட்சிக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும், செய்யாறு நகராட்சிக்கு செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வந்தவாசி நகராட்சிக்கு வந்தவாசி அகிலாண்டேஸ்வரி கல்லூரியிலும் வாக்குகள் எண்ணப்படுகிறது.
அதேபோல செங்கம் மற்றும் புதுப்பாளையம் பேரூராட்சிகளுக்கு செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கீழ்பென்னாத்தூர் மற்றும் வேட்டவலம் பேரூராட்சிகளுக்கு திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
கண்ணமங்கலம், போளூர், களம்பூர் பேரூராட்சிகளுக்கு போளூர் ரேணுகாம்பாள் கலைக் கல்லூரியிலும், சேத்துப்பட்டு, தேசூர், பெரணமல்லூர் பேரூராட்சிகளுக்கு சேத்துப்பட்டு தோமினிக் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்குகள் எண்ணப்படுகிறது.
3 அடுக்கு பாதுகாப்பு
வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்ட மின்னணு எந்திரங்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் வட்டார தேர்தல் பார்வையாளர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
பின்னர் அந்த அறைக்கு ‘சீல்’ வைத்து துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு ேபாடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஈடுபடுகிறார்கள்.
மேலும் சி.சி.டிவி மற்றும் சுழலும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை
நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.
பேரூராட்சிக்கான முடிவுகள் காலை 10 மணிக்கு தெரியவரும். நகராட்சிக்கான முடிவுகள் பகல் 12 மணிக்குள் தெரியும்.
இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி ஆரணியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வேட்பாளர், அவருடன் ஒரு நபர் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்பதனை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் எடுத்துரைத்தார். ஒவ்வொரு சுற்றிலும் 12 மேஜைகள் வீதம் வாக்கு எண்ணப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் பி.தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.
Related Tags :
Next Story