வாக்குப்பதிவு எந்திரங்கள் அறைக்கு `சீல்' வைப்பு


வாக்குப்பதிவு எந்திரங்கள் அறைக்கு `சீல் வைப்பு
x
தினத்தந்தி 20 Feb 2022 7:21 PM IST (Updated: 20 Feb 2022 7:21 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அறைக்கு சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) 9 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைத்து `சீல்' வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளில் உள்ள 396 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக நடைபெற்றது.
வாக்குப்பதிவு முடிவடைந்ததும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், வாக்குப்பதிவு தொடர்பான அனைத்து ஆவணங்களும் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. 
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 319 வாக்குச்சாவடிகளில் இருந்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் தூத்துக்குடி வ.உ.சி. அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன. இந்த பணிகளை நள்ளிரவு வரை மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரான கமிஷனர் சாருஸ்ரீ ஆகியோர் அங்கேயே முகாமிட்டு கண்காணித்தனர்.
இதேபோல் 3 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளில் வாக்குகள் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரப்பட்டன.
அறைக்கு `சீல்’ வைப்பு
இதனை தொடர்ந்து நேற்று காலையில் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஆவணங்கள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பறைகளில் வைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் `சீல்' வைத்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை மையமான வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ நேரடி மேற்பார்வையில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 2 வைப்பறைகளில் வைத்து `சீல்' வைக்கப்பட்டன.
தேர்தல் பார்வையாளர் ஆய்வு
தூத்துக்குடி வ.உ.சி. அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்த இந்த பணிகளை தேர்தல் பார்வையாளர் அதுல் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து வாக்குகளை எண்ணும் பணி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
வாக்கு எண்ணிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 9 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் தூத்துக்குடி வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. 
கோவில்பட்டி நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. 
திருச்செந்தூர் மற்றும் காயல்பட்டினம் நகராட்சிகள், ஆறுமுகநேரி, கானம், ஆத்தூர் பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் வீரபாண்டியன்பட்டினம் செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.
அதுபோல் ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை பேரூராட்சிகளுக்கு ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளி, நாசரேத், உடன்குடி, சாத்தான்குளம் பேரூராட்சிகளுக்கு பிரகாசபுரம் செயின்ட் மேரீஸ் நடுநிலைப்பள்ளி, ஏரல், பெருங்குளம், சாயர்புரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய பேரூராட்சிகளுக்கு சாயர்புரம் போப் கல்லூரி, எட்டயபுரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கயத்தாறு பேரூராட்சிக்கு கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி, கழுகுமலை பேரூராட்சிக்கு கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு கேமரா
இந்த வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்து `சீல'் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். 
மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். மதியத்துக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பிரண்டு தலைமையில் பாதுகாப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியாக முடிவடைந்தது. இருப்பினும் மாலையில் வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்தில் ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடிகளுக்கு முன்பு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டன. ஒருசில இடங்களில் தள்ளுமுள்ளு, கைகலப்பும் ஏற்பட்டது. ஆனால் போலீசார் விரைந்து செயல்பட்டு பெரிய அளவிலான மோதல் ஏதும் ஏற்படாமல் தடுத்தனர்.
எனவே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்கு மாவட்டம் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story