புதிய மலர் நாற்றுகள் நடவு செய்வது எப்போது?


புதிய மலர் நாற்றுகள் நடவு செய்வது எப்போது?
x
தினத்தந்தி 20 Feb 2022 7:45 PM IST (Updated: 20 Feb 2022 7:45 PM IST)
t-max-icont-min-icon

பொலிவிழந்து கிடக்கும் நேரு பூங்காவில் புதிய மலர் நாற்றுகள் நடவு செய்வது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கோத்தகிரி

பொலிவிழந்து கிடக்கும் நேரு பூங்காவில் புதிய மலர் நாற்றுகள் நடவு செய்வது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 

நேரு பூங்கா

கோத்தகிரி நேரு பூங்காவில் அழகிய புல் தரைகள், ரோஜா பூந்தோட்டம், சிறுவர் விளையாட்டு பூங்கா, கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவில் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் கோடைவிழா நடைபெறும்போது முதல் நிகழ்ச்சியாக நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். 

இதை கண்டுகளிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் வந்து செல்வர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக காய்கறி கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. தொற்று குறைந்து வருவதால் இந்த ஆண்டு கோடை விழா நடத்த வாய்ப்பு உள்ளது. 

நிதி ஒதுக்கீடு

இந்தநிலையில் வருகிற கோடை சீசனுக்கு முன்னதாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவின் நுழைவாயில் பகுதியில் அழகிய நீரூற்று அமைத்தல், பூங்காவை சுற்றிலும் சுவர் கட்டுதல், சிறுவர் விளையாட்டு பூங்காவில் குழந்தைகளுக்கான கூடுதல் உபகரணங்களை அமைத்தல், கழிப்பிடத்தை பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதற்காக 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து பணிகள் தொடங்கிய நிலையில், மிகவும் தாமதமாக நடைபெற்று வருகின்றன. வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் கோடை சீசனுக்கு பூங்காவை தயார் செய்வதற்காக 45 ஆயிரம் மலர் நாற்றுக்கள் நடவு செய்வது வழக்கம். மேலும் நடைபாதை, தடுப்பு கம்பிகள் உள்ளிட்டவை பராமரிக்கப்பட்டு வர்ணம் பூசி புதுப்பிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் உள்ளது.

காட்டெருமைகள் கூட்டம்

மேலும் பூங்காவில் சுற்றுச்சுவர் கட்டப்படாததால் காட்டெருமைகள் மற்றும் காட்டுப்பன்றிகள் கூட்டமாக புகுந்து அழகிய புல் தரைகளை மிதித்து சேதம் செய்து வருகின்றன. மேலும் மலர் செடிகளை தின்று விடுகின்றன. இதனால் பூங்கா தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. 

இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறும்போது, கோடை சீசனுக்குள் நேரு பூங்கா தயாராகுமா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. பூங்காவை சுற்றி விரைந்து சுவர் கட்டி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். புதிய மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணியை துரிதப்படுத்தினால் மட்டுமே காய்கறி கண்காட்சிக்கு தயார்படுத்த முடியும். எனவே முன்னேற்பாடு பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர்.


Next Story