தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரியகிராமத்தில் சாக்கடைநீர் மற்றும் செடி, கொடிகள் படர்ந்து இருந்ததால் கொசு தொல்லை அதிகமாக இருந்தது. எனவே இந்த பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று கீழக்கலங்கல் பகுதியைச் சேர்ந்த டெக்கான் என்பவர் தினத்தந்தி புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக வெளியானது. இதன் எதிரொலியாக கிராமத்தில் கொசு மருந்து அடிக்கப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார். 

சுகாதாரக்கேடு

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி விலக்கு 18-வது வார்டு குடிசை மாற்று வாரியம் பகுதி 1-ல் மூன்று முக்கு சந்திக்கும் இடத்தில் பாதாள சாக்கடை பணிக்காக குழிதோண்டப்பட்டது. ஆனால் இந்த குழி மூடப்படாமல் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திறந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்லக்கூட முடியாமல் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும் சாக்கடை நீரால் கொசு உற்பத்தியாகி சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த குழியை உடனடியாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஆனந்த ராமசுப்பிரமணியன், சுத்தமல்லி விலக்கு.

பஸ்கள் முறையாக இயக்கப்படுமா?

நெல்லை சிவந்திப்பட்டியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இங்கிருந்து தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பஸ்களில் பாளையங்கோட்டை உழவர் சந்தைக்கு சென்று காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருகிறார்கள். மேலும் இந்த ஊரில் இருந்து நெல்லை சந்திப்பு பகுதிக்கு தினமும் அரசு, தனியார் பஸ்கள் என மொத்தம் 7 பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் இதில் ஒரு சில பஸ்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த பஸ்களை நம்பி இருக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் பஸ்களை முறையாக இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துப்பாண்டி, சிவந்திப்பட்டி.

சேதமடைந்த இருக்கைகள்

திசையன்விளை பெருந்தலைவர் காமராஜர் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள பெரும்பாலான இருக்கைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் பயணிகள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்து நிற்கும் நிலை உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் புதிய இருக்கைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.
பிரபு குமார், நாடார் அச்சம்பாடு.

போக்குவரத்து நெரிசல்

தென்காசி மாவட்டம் கடையத்தில் மெயின் பஜார் சாலை குறுகலாக உள்ளது. மேலும் சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதிப்படுகிறார்கள். இந்த நிகழ்வு தினமும் நடந்து வருகிறது. எனவே இதில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
திருக்குமரன், கடையம்.

பழுதான அடிபம்பு

சங்கரன்கோவில் காமராஜர் நகர் 2-வது தெருவில் உள்ள அடிபம்பு கடந்த சில மாதங்களாக பழுதடைந்து காட்சிப்பொருளாகவே உள்ளது. இதுகுறித்து நகராட்சியில் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த அடிபம்பை சரிசெய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராகவன், சங்கரன்கோவில்.

நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து புளியங்குளம், லட்சுமியம்மாள்புரம், இளையரசனேந்தல் கீழக்காலனி, இளையரசனேந்தல் வழியாக வரகனூர் வரை தடம் எண்-6 அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை பராமரிப்பு பணி, கொரோனா காரணமாக இந்த பஸ் நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது வரை இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் மேற்கண்ட ஊர்மக்கள் மிகவும் சிரமப்படுகிறாா்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 
விஜயகுமார், இளையரசனேந்தல்.

Next Story