திருமூர்த்திமலையில் உள்ள சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது


திருமூர்த்திமலையில் உள்ள சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
x
தினத்தந்தி 20 Feb 2022 9:43 PM IST (Updated: 20 Feb 2022 9:43 PM IST)
t-max-icont-min-icon

திருமூர்த்திமலையில் உள்ள சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

தளி,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பொது விடுமுறையால் திருமூர்த்திமலையில் உள்ள சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
திருமூர்த்திமலை
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலுக்கு வருகின்ற வழியில் சிறுவர்பூங்கா, நீச்சல்குளம், படகு இல்லம், திருமூர்த்திஅணை, வண்ணமீன் காட்சியகம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளது. 
அதுமட்டுமின்றி கோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 750 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவியும் அங்கிருந்து 150 மீட்டர் தூரத்தில் பஞ்சலிங்கங்களும் உள்ளது. மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் உடுமலை பகுதியில் சிறந்த சுற்றுலா தலமாக திருமூர்த்திமலை விளங்கி வருகிறது.
வெறிச்சோடியது
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நேற்றுமுன்தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்றுமுன்தினம் தளி பேரூராட்சிக்கு உட்பட்ட திருமூர்த்தி மலைக்கு குறைந்த அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதனால் பரபரப்பாக காணப்படும் நேற்றுமுன்தினம் இந்த இடம்  வெறிச்சோடி காணப்பட்டது. 
அந்த வகையில் உடுமலை ஒன்றிய அலுவலகம் சார்பில் பராமரித்து வருகின்ற நீச்சல்குளத்தில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது. 
ஆனால் குடும்பத்தோடு வந்திருந்த சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் நீச்சல் அடித்து மகிழ்ந்தனர். மேலும் பஞ்சலிங்க அருவி,திருமூர்த்தி அணை, நீச்சல்குளம்  உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

Next Story