கடலூர் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை
கடலூர் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் நாளை(செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. சுற்றுகள் வாரியாக முடிவு அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அந்தந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. மொத்தம் 14 வாக்கு எண்ணும் மையங்களில் எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
இந்த வாக்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது. முதலில் தபால் வாக்குகளும், அதன்பிறகு மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகிறது. இதன்படி கடலூர் மாநகராட்சிக்கு வாக்கு எண்ணும் மையமான கடலூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் 14 மேஜைகள் போடப்பட்டு, 16 சுற்றுகள் எண்ணப்படுகிறது. இதற்காக 17 வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், 17 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குகள் எண்ணப்படுவது 28 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
சுற்றுகள் விவரம்
நெல்லிக்குப்பம் நகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 10 மேஜைகள் போடப்பட்டு, 10 சுற்றுகள் எண்ணப்படுகிறது. இதற்காக தலா 10 மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 20 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. பண்ருட்டி நகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 10 மேஜைகள் அமைக்கப்பட்டு, 7 சுற்றுகள் எண்ணப்படுகிறது. தலா 10 மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். 16 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
சிதம்பரம் நகராட்சிக்காக வாக்கு எண்ணும் மையத்தில் 10 மேஜைகள் போடப்பட்டு, 7 சுற்றுகள் எண்ணப்படுகிறது. இதில் தலா 10 மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் பணியில் இருப்பார்கள். 22 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணிக்கை கண்காணிக்கப்படுகிறது. விருத்தாசலம் நகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 10 மேஜைகள் போடப்பட்டு, 8 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்படுகிறது. தலா 10 மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். 6 கேமராக்கள் மூலம் கண்காணிப்படுகிறது.
திட்டக்குடி நகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 3 மேஜைகள் போடப்பட்டு, 8 சுற்றுகள் எண்ணப்படுகிறது. தலா 3 மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் பணியில் இருப்பார்கள். 4 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. வடலூர் நகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 10 மேஜைகள் போடப்பட்டு, 10 சுற்றுகள் எண்ணப்படுகிறது. இங்கு தலா 10 மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவர். 15 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
பேரூராட்சிகள்
பேரூராட்சிகளில் அண்ணாமலைநகருக்கு ஒரு மேஜை போட்டு, 15 சுற்றுகளும், புவனகிரிக்கு 2 மேஜை போட்டு 11 சுற்றுகளும், கெங்கைகொண்டானுக்கு ஒரு மேஜை போட்டு, 15 சுற்றுகளும், காட்டுமன்னார்கோவிலுக்கு 2 மேஜைகள் போட்டு 13 சுற்றுகளும், கிள்ளைக்கு 1 மேஜை போட்டு, 13 சுற்றுகளும், குறிஞ்சிப்பாடிக்கு 2 மேஜைகள் போட்டு 14 சுற்றுகளும், லால்பேட்டைக்கு 1 மேஜை போட்டு 16 சுற்றுகளும், மங்கலம்பேட்டைக்கு ஒரு மேஜை போட்டு15 சுற்றுகளிலும் வாக்குகள் எண்ணப்படுகிறது.
மேல்பட்டாம்பாக்கத்திற்கு ஒரு மேஜை போட்டு 15 சுற்றுகளும், பரங்கிப்பேட்டைக்கு 2 மேஜைகள் போடப்பட்டு 14 சுற்றுகளும், பெண்ணாடத்திற்கு 2 மேஜைகள் போட்டு 9 சுற்றுகளும், சேத்தியாத்தோப்புக்கு 2 மேஜைகள் போடப்பட்டு 14 சுற்றுகளும், ஸ்ரீமுஷ்ணத்திற்கு 2 மேஜைகள் போட்டு 7 சுற்றுகளும், தொரப்பாடிக்கு ஒரு மேஜை போட்டு 15 சுற்றுகளும் வாக்குகளும் எண்ணப்படுகிறது. இங்கு மொத்தம் 20 மேற்பார்வையாளர்கள், 28 உதவியாளர்கள் பணியில் இருப்பார்கள். 32 கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story