‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல் :
செயல்படாத கழிப்பறை
சித்தையன்கோட்டை பேரூராட்சி சேடப்பட்டியில் உள்ள கழிப்பறை கடந்த சில மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவலம் உள்ளது. மேலும் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே செயல்படாமல் உள்ள கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், சேடப்பட்டி.
குப்பைகள் அள்ளப்படுமா?
வேடசந்தூர் தாலுகா மோர்பட்டி 7-வது வார்டில் கடந்த சில வாரங்களாக குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது. இதனால் குப்பை தொட்டியில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அள்ளிச்செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலசுப்பிரமணி, மோர்பட்டி.
அடிப்படை வசதி வேண்டும்
போடியை அடுத்த ராசிங்காபுரத்தில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் குப்பைகளை மயான பகுதியில் கொட்டிச்செல்லும் நிலை உள்ளது. மேலும் இந்த கிராமத்தில் சாக்கடை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அழகர், ராசிங்காபுரம்.
சாலை சீரமைக்கப்படுமா?
சத்திரப்பட்டி ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் தண்டவாளத்தை கடக்கும் போது வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்தன், சத்திரப்பட்டி.