வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு


வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Feb 2022 10:31 PM IST (Updated: 20 Feb 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் விசாகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்: 


வாக்கு எண்ணும் மையங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 478 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவுக்காக மாவட்டம் முழுவதும் 894 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் மாலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளிட்டவை ‘சீல்’ வைக்கப்பட்டன.
அதையடுத்து வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பெறப்பட்டு 60 மண்டல அலுவலர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 11 வாக்கு எண்ணும் மையங்களுக்கு அவை கொண்டு செல்லப்பட்டன. இதில் திண்டுக்கல் மாநகராட்சியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கும் பணி நடந்தது.

கலெக்டர் ஆய்வு
இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த வாக்கு எண்ணும் மையத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான விசாகன் சென்றார். பின்னர் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றிலும் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்ட கலெக்டர் கட்டுப்பாட்டு அறையில் முறையாக கண்காணிப்பு பணி நடக்கிறதா? என்று ஆய்வு செய்தார். பின்னர் வாக்கு எண்ணும் நாளில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

மேலும் மாவட்டம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். 

Next Story