சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரிக்கு கொண்டு சென்று பாதுகாப்பு அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டன
சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரிக்கு கொண்டு சென்று பாதுகாப்பு அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டன
திருப்பூர், பிப்.21-
திருப்பூர் மாநகராட்சியில் வாக்குப்பதிவு முடிந்ததும் எந்திரங்களை வாக்கு எண்ணும் மையமான சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரிக்கு கொண்டு சென்று பாதுகாப்பு அறைகளில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை மையம்
திருப்பூர் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. 60 வார்டுகளில் 776 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அதன்பிறகு வாக்குச்சாவடியில் உள்ள முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையமான சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் வினீத், மாநகராட்சி தேர்தல் அதிகாரியான ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் பாதுகாப்பு அறைகளை ஆய்வு செய்து அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்தினார்கள். நள்ளிரவு வரை வாக்கு எண்ணும் எந்திரங்கள் வந்தன. 4 மண்டலத்துக்கு 4 கட்டிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த கட்டிடங்களில் பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன.
விடிய, விடிய நடந்த பணிகள்
அதன்பிறகு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். பாதுகாப்பு அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. காலை 5 மணிக்கு இந்த பணிகள் அனைத்தும் முடிந்தது. ஆணையாளர் கிராந்திகுமார் பாடி முன்னிலையில் இந்த பணிகள் நடைபெற்றது. விடிய, விடிய அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றினார்கள். வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story