3 கோவில்களின் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு


3 கோவில்களின் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 20 Feb 2022 11:19 PM IST (Updated: 20 Feb 2022 11:19 PM IST)
t-max-icont-min-icon

குன்னம் அருகே 3 கோவில்களின் உண்டியல்களை உடைத்து பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குன்னம், 
எல்லையம்மன் கோவில்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வேப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரி மருதமுத்து நேற்று வழக்கம்போல் பூஜை செய்து விட்டு மாலை கோவிலை பூட்டிவிட்டு தனது வீட்டுக்கு சென்றார்.
இன்று காலை 6 மணியளவில் கோவில் தர்மகர்த்தா மனைவி சரோஜா பால் கறக்க சென்றபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது கணவர் செங்கமலைக்கு தகவல் தெரிவித்தார்.
உண்டியல்கள் உடைப்பு
இதையடுத்து, கோவிலுக்கு பொதுமக்கள் சென்று பார்த்த போது பெரிய மற்றும் சிறிய  உண்டியல்களை காணவில்லை. பின்னர் தேடியபோது அம்மா பூங்கா அருகே ஒரு உண்டியலும், பெருமத்தூர் பிரிவு சாலை அருகே மற்றொரு உண்டியலும் உடைக்கப்பட்டு கிடந்தன. மேலும், அதில் பக்தர்கள் செலுத்திய ரூ.20 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதேபோன்று குன்னம் அருகே உள்ள ஓலைப்பாடி கிராமத்தில் அய்யனார் கோவில் பூசாரி கருப்பையா நேற்று கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று காலை வளர்மதி என்பவர் பால் கறக்க சென்றபோது கோவில் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பூசாரி வந்து பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.1 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. 
அதேபோல் ஓலைப்பாடி கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்த உண்டியலை மர்ம ஆசாமிகள் உடைத்து அதிலிருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்றனர்.
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
வேப்பூர், ஓலைப்பாடி கிராமங்களில் உள்ள 3 கோவில்களின் உண்டியலை உடைத்து மர்ம ஆசாமிகள் பணத்தை திருடிய சம்பவம் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து கோவில் பூசாரிகள் கொடுத்த புகார்களின் பேரில் குன்னம் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும், சம்பவ இடங்களுக்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் சென்று தடய அறிவியல் பரிசோதனை செய்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story