வேலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
வேலூர் மாவட்டத்தில் உள்ள வாக்குகள் எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் உள்ள வாக்குகள் எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், டி.ஐ.ஜி. ஆனி விஜயா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள், ஒடுகத்தூர், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, ஒடுகத்தூர் ஆகிய பேரூராட்சிகளில் 178 வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. தேர்தலில் 66.68 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வேட்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 'சீல்' வைக்கப்பட்டன. பின்னர் அவை வேனில், போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள பாதுகாப்பு அறைகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன.
வேலூர் மாநகராட்சி வாக்குகள் வேலூர் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், குடியாத்தம் நகராட்சி வாக்குகள் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும், பேரணாம்பட்டு நகராட்சி வாக்குகள் பேரணாம்பட்டு மேரிட் ஹாஜி இஸ்மாயில் சாகிப் கல்லூரியிலும், ஒடுகத்தூர், பள்ளிகொண்டா பேரூராட்சிகளின் வாக்குகள் பள்ளிகொண்டா லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளியிலும், பென்னாத்தூர், திருவலம் பேரூராட்சிகளின் வாக்குகள் பள்ளிகொண்டா ஆர்.சி.எம்.பள்ளியிலும் எண்ணப்படுகிறது.
துப்பாக்கி ஏந்திய போலீஸ்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு ‘சீல்' வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதைத்தவிர வாக்கு எண்ணும் மையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தின் உள் மற்றும் வெளிப்புறப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணும் பணி நாளை (செவ்வாய்கிழமை) காலை 8 மணிக்கு நடக்கிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதைத்தொடர்ந்து வாக்குச்சாவடி வாரியாக ஓட்டுகள் எண்ணும் பணி நடைபெறும். 5 மையங்களிலும் வாக்கு எண்ணும் பணியில் 3 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர்.
பள்ளிகொண்டா
பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், பென்னாத்தூர், திருவலம், ஆகிய பேரூராட்சிகளில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் பள்ளிகொண்டா ஆர்.சி. எம். பள்ளி மற்றும் லிட்டில் பிளவர் பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் எண்ணப்படுகிறது. இதற்காக வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தை வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் நேற்று மாலை 5 மணிக்கு ஆய்வு செய்தனர். இந்த மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு போதுமானதாக உள்ளதா என அவர்கள் ஆய்வு செய்தனர்.
அனுமதிக்கக்கூடாது
அப்போது இரவு நேரத்தில் பள்ளியைச் சுற்றி போலீசார் ரோந்து பணியில் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுரை வழங்கினர். தேவையில்லாத நபர்களை பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது என பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கு உத்தரவிட்டனர். ஆய்வின்போது பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி உடனிருந்தார்.
வேலூர் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் நேற்று மாலை ஆய்வு செய்தார். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த போலீஸ் கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி பார்வையிட்டார். அப்போதுவாக்கு எண்ணும் மைய வளாகத்தில் சில இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையத்துக்கு வேட்பாளர்கள், முகவர்கள் அனைவரையும் முழுமையாக சோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மனோகர், ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் முரளி, செந்தில்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
குடியாத்தம்
குடியாத்தம் நகராட்சியில் பதிவான வாக்குகள் குடியாத்தம் காந்திநகரில் உள்ள ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்படுகிறது. இதனால் குடியாத்தம் நகராட்சி பகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு குடியாத்தம் நகராட்சி தேர்தல் மேற்பார்வையாளர் வெங்கடராமன், குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் மற்றும் தேர்தல் அலுவலருமான திருநாவுக்கரசு, நகராட்சி பொறியாளர் சிசில் தாமஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, நிர்மலா ஆகியோர் முன்னிலையில் வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் 48 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலமாகவும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வாக்கு எண்ணிக்கை மையத்தை வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி நேற்று பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். மேலும் கண்காணிப்பு கேமராக்களை கண்காணிப்பு அறையிலிருந்து இருந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story