நிலத்தகராறில் இருதரப்பினரிடையே மோதல்: படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு தலைமறைவாக இருந்த வாலிபர் கைது


நிலத்தகராறில் இருதரப்பினரிடையே மோதல்: படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Feb 2022 12:06 AM IST (Updated: 21 Feb 2022 12:06 AM IST)
t-max-icont-min-icon

நிலத்தகராறில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆதனக்கோட்டை:
மோதல்
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே கணபதிபுரம் கிராமம் ஆதிதிராவிட தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மனைவி ஜெயலட்சுமி. அதேபகுதியை சேர்ந்த தொழிலாளியான கோகிலவாசகன் மனைவி அருள்ஜெயமலர் (வயது 43). இவர்கள் இரு குடும்பத்தினருக்கும் இடையே அரசு புறம்போக்கு இடத்தை யார் கைப்பற்றுவது என நீண்ட நாட்களாக தகராறு இருந்த வந்தது. 
இந்நிலையில் கடந்த 15-ந் தேதி இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைக்கலப்பானது. இதில் அருள்ஜெயமலர் கணவர் கோகிலவாசகனை (50), ஜெயலட்சுமியின் கணவர் ரெங்கசாமி, அவரது மகன்கள் ஜெயபால் (32), ஜெயராஜ் (28) ஆகியோர் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்தார். 
தொழிலாளி சாவு 
இதில் படுகாயமடைந்த கோகிலவாசகனை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோகுலவாசன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து அருள்ஜெயமலர் ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான ரெங்கசாமி, ஜெயராஜ் ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ஜெயராஜை (28) போலீசார் கைது செய்தனர். 
இதுகுறித்து கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் மேல் விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story