அரிவாள், கோடரி தயாரிக்கும் பணியில் வடமாநில தொழிலாளர்கள்
அதிராம்பட்டினத்தில் வடமாநில தொழிலாளர்கள் அரிவாள், கோடரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவைகள் ரூ.150 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினத்தில் வடமாநில தொழிலாளர்கள் அரிவாள், கோடரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவைகள் ரூ.150 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
கொல்லன் பட்டறைகள்
முந்தைய காலங்களில் விவசாய பணிகள் மற்றும் கிணறு வெட்டுதல் போன்றவற்றிற்கு மண்வெட்டி, கடப்பாறை, வெட்டரும்பு, களைவெட்டி, குந்தாளம், கலப்பை கூர்முனை, கோடரி, அரிவாள், கத்தி, இரும்பு கதவின் கொண்டி உள்ளிட்ட இரும்பு பொருட்களை பயன்படுத்தி வந்தோம். இதனை தயாரிக்கவும், பழுதுபார்க்கவும் கொல்லன் பட்டறைகள் பரவலாக காணப்பட்டன.
கோடரி, அரிவாள் தயாரிக்கும் பணி
தற்போது அந்த பட்டறைகள் மூடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து வந்த தொழிலாளர்கள் அதிராம்பட்டினம் பஸ்நிலையம், காலேஜ் முக்கம், கிழக்கு கடற்கரைச்சாலை உள்ளிட்ட இடங்களில் தங்கி உள்ளனர். மேலும் இந்த பகுதிகளில் திறந்தவெளியில் கொல்லன்பட்டறை அமைத்து இரும்பு பொருட்களை உருக்கி அரிவாள், கடப்பாறை, கோடரி மற்றும் கலப்பை கூர்முனை, குந்தாளம் உள்ளிட்ட இரும்பு கருவிகளை நேரடியாக தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்த கோடரி, அரிவாள் உள்ளிட்ட பொருட்களை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வாங்கி செல்கின்றனர். ்இவை ரூ.150 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்களிடமுள்ள பழைய இரும்பு கருவிகளை புதுப்பித்தும் வருகிறார்கள்.
நலிவடையும் தொழில்
இதுபற்றி வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில், நாங்கள் பரம்பரை பரம்பரையாக கொல்லன் பட்டறை தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது இந்த தொழில் நலிவடையும் நிலையில் இருக்கிறது. ஆனாலும் மக்கள், வணிகர்கள், விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு பாரம்பரிய தொழிலில் தொடர்ந்து ஈடுபடுகிறோம். இந்த தொழில் மூலம் வருவாய் ஈட்டி பிழைப்பு நடத்தி வருகிறோம் என்றனர்.
Related Tags :
Next Story