தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 21 Feb 2022 1:24 AM IST (Updated: 21 Feb 2022 1:24 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


குண்டும், குழியுமான சாலை
தர்மபுரி நகர பகுதியில் 4 ரோட்டில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலையில் பழைய தர்மபுரி வரை உள்ள பகுதி பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், பஸ்கள், லாரிகள் சென்று வருகின்றன. சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் சாலையில் வாகனங்களை ஓட்ட சிரமப்படுகின்றனர். எனவே பழுதான இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், தர்மபுரி.
வேகத்தடை அமைக்கப்படுமா?
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்- சக்கில்நத்தம்- மாடரஹள்ளி- மத்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையில் பட்லபள்ளி கூட்டுரோடு பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி பட்லபள்ளிக்கு செல்லும் பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-சி.செந்தில், பர்கூர், கிருஷ்ணகிரி.
ஜல்லிக்கற்கள் பெயர்ந்த தார்சாலை
நாமக்கல் மாவட்டம் வீரணம்பாளையத்தில் இருந்து கபிலர்மலை செல்லும் தார்சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். சாலையில் உள்ள பள்ளங்களால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்களும் நடக்கின்றன. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தனிக்கவனம் செலுத்தி இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரேகா, நாமக்கல்.
சாலையோரத்தில் சேதமடைந்த தடுப்புகள்
சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் எதிரே பெரியார் மேம்பாலத்தையொட்டி சாலையோரம் சேதமடைந்த தடுப்புகள் போட்டு வைக்கப்பட்டுள்ளன. சாலை போக்குவரத்துக்கு இந்த தடுப்புகள் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளன. மேலும் பெரியார் மேம்பாலத்தையொட்டி நடப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு இடையூறாக உள்ளன. எனவே சேதமடைந்த தடுப்புகளை அங்கிருந்து சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.
-கண்ணன், சேலம்.
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் ஆங்காங்கே மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கவும், அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதேஸ்வரன், ஆத்தூர்.
ஆமை வேகத்தில் சாக்கடை கால்வாய் பணி
சேலம் பொன்னம்மாபேட்டை தில்லைநகர் மெயின்ரோடு பகுதியில் சாக்கடை கால்வாய் பணி கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. அந்த பகுதியில் ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு புழுதி படலமாக காட்சி அளிக்கிறது. ஆமை வேகத்தில் நடக்கும் இந்த சாக்கடை கால்வாய் பணியால் அந்த பகுதியில் குடியிருப்போர் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே இந்த கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
-வெங்கடேஷ், பொன்னம்மாபேட்டை, சேலம்.
சாக்கடை கால்வாய் வேண்டும் 
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி 9-வது வார்டு கோனேரிப்பட்டி பகுதியில் பல ஆண்டுகளாக சாக்கடை கால்வாய் இல்லாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகரிப்பதுடன் அந்த பகுதியில்  நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.
-நவீன், கோனேரிப்பட்டி, சேலம்.

Related Tags :
Next Story