ரெயில்வே கேட் 1 மணி நேரம் மூடப்பட்டது


ரெயில்வே கேட் 1 மணி நேரம் மூடப்பட்டது
x
தினத்தந்தி 21 Feb 2022 1:38 AM IST (Updated: 21 Feb 2022 1:38 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் ரெயில்வே கேட் 1 மணி நேரம் நேற்று அதிகாலை மூடப்பட்டதால் நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ரெயில் மற்றும் பஸ் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

நீடாமங்கலம்:
நீடாமங்கலம் ரெயில்வே கேட் 1 மணி நேரம் நேற்று அதிகாலை மூடப்பட்டதால் நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ரெயில் மற்றும் பஸ் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். 
1 மணி நேரம் ரெயில்வே கேட் மூடல்
நீடாமங்கலம் ரெயில்வேகேட் நேற்று அதிகாலை 4.25 மணிக்கு மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலிப்பெட்டிகளுடன் கூடிய சரக்கு ரெயில் ஒன்றாவது நடைமேடை பகுதியில் வந்து நின்றது. அதேசமயம் 4.38 மணியளவில் சென்னையி்ல் இருந்து மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் மூன்றாவது நடைமேடை பகுதியில் வந்து நின்றது.
பயணிகள் இறங்கிய பின்னர் அந்த ரெயில் மன்னார்குடி புறப்பட்டு சென்றது. அதன் பின்னர் சரக்கு ரெயில் என்ஜின் திசை மாற்றப்பட்டது. இந்த பணி முடிய ஒரு மணி நேரம் ஆனது. காலிப்பெட்டிகளுடன் சரக்கு ரெயில் மன்னார்குடி புறப்பட்டு சென்றது. 1 மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் சாலையின் இருபுறமும் பஸ்கள், லாரிகள், கார்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ரெயில் பயணிகள் பலர் சாலையை கடந்து செல்ல சிரமப்பட்டனர்.
பயணிகள், பொதுமக்கள் அவதி
பின்னர் 5.30 மணியளவில் ெரயில்வே கேட் திறந்த பின்னர் வாகனங்கள் புறப்பட்டு சென்றன. வாகனங்கள் நீடாமங்கலம் ரெயில்வே கேட்டை கடந்து செல்ல ½ மணி நேரமானது. இதனால் நெடுஞ்சாலை பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
நீடாமங்கலம் நகரில் அடிக்கடி ஏற்படும் இந்த போக்குவரத்து நெருக்கடியை போக்கிட மந்தமான நிலையில் நடைபெறும் இருவழி சாலை திட்ட பணிகளை துரிதப்படுத்திட வேண்டும். 
கிடப்பில் போடப்பட்டுள்ள நீடாமங்கலம் மேம்பாலம் திட்ட பணிகளை விரைவில் தொடங்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story