வாக்கு எண்ணும் மையத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
வாக்கு எண்ணும் மையத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருச்சி:
வாக்குப்பதிவு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நேற்று முன்தினம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகராட்சி, துறையூர், துவாக்குடி, மணப்பாறை, லால்குடி, முசிறி ஆகிய 5 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் திருச்சி மாநகராட்சியில் 859 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று முன்தினம் மாலை ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டன.
பூட்டி சீல் வைப்பு
அங்கு பொன்மலை, கோ-அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம் என்று கோட்டம் வாரியாக அமைக்கப்பட்டு இருந்த தனித்தனி பாதுகாப்பு அறைகளில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வரிசையாக வைக்கப்பட்டன. பின்னர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.சிவராசு, மாநகராட்சி தேர்தல் பார்வையாளர் பழனிகுமார், மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் முஜிபுர்ரகுமான் ஆகியோர் முன்னிலையில் அந்த அறைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.
இதேபோல் அரியமங்கலம் கோட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் ஜமால் முகமது ஆசிரியர் பயிற்சி கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த பணிகள் நேற்று காலை வரை நடைபெற்றது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள ஜமால் முகமது கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
துப்பாக்கி ஏந்திய போலீசார்
6 உதவி போலீஸ் கமிஷனர்கள், 18 இன்ஸ்பெக்டர்கள், 36 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை போலீசார் உள்பட மொத்தம் 255 போலீசார் 3 ஷிப்ட்களில் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைகள் முன் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறை, வாக்கு எண்ணும் அறை மற்றும் அந்த மையத்தின் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர தீயணைப்பு வாகனம், வஜ்ரா வாகனம் ஆகியவையும் தயார் நிலையில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் நிறுத்தப்பட்டுள்ளன.
புறநகர் பகுதி
இதேபோல் மாவட்டத்தில் 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்ட செல்லப்பட்டன். பின்னர் அவை பாதுகாப்பாக தனித்தனி அறையில் வைக்கப்பட்டு, அந்த அறைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை புறநகர் பகுதியில் 6 இடங்களில் உள்ள 10 வாக்கு எண்ணும் மையங்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 182 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை அந்தந்த மையங்கள் முன்பு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
கலெக்டர் திடீர் ஆய்வு
இந்நிலையில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு நேற்று காலை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்ட அறைகள் முன்பு பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஈடுபட்டுள்ளது உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story