டாஸ்மாக் கடைகளில் திரண்ட மதுபிரியர்கள்
3 நாட்களுக்கு பின்பு திறக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் திரண்டனர்
நாகர்கோவில்:
3 நாட்களுக்கு பின்பு திறக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் திரண்டனர்.
குமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி கடந்த 17, 18, 19-ந் தேதி ஆகிய 3 நாட்கள் குமரி மாவட்டம் முழுவதும் உள்ள 133 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் கடந்த 16-ந் தேதியன்று அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. இதன்மூலம் தினசரி விற்பனையை விட அன்று இரட்டிப்பாக ரூ.6 கோடியே 5 லட்சத்துக்கு மது விற்பனை நடந்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி 5 கி.மீ.க்குள் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் உணவு விடுதியுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள் நாளை அடைக்கப்படுகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள 133 டாஸ்மாக் கடைகளில் 77 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும். நாகர்கோவிலில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருக்கும்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகளுக்கு மதுபிரியர்கள் திரண்டு வந்து ஒன்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்களையும், சிலர் பெட்டி-பெட்டியாகவும் மதுவை வாங்கி சென்றனர். இதனால் சில கடைகளில் நீண்ட வரிசையில் மது பிரியர்கள் காத்திருந்ததை காண முடிந்தது. இதனால் நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிக அளவு மது விற்பனை நடந்தது.
Related Tags :
Next Story