துங்கபத்ரா ஆற்றங்கரையை புனரமைக்கும் ‘துங்கபத்ரா ஆரத்தி’ திட்டம் - பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்


துங்கபத்ரா ஆற்றங்கரையை புனரமைக்கும் ‘துங்கபத்ரா ஆரத்தி’ திட்டம் - பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Feb 2022 2:27 AM IST (Updated: 21 Feb 2022 2:27 AM IST)
t-max-icont-min-icon

தாவணகெரே மாவட்டம் ஹரிஹராவில் துங்பத்ரா ஆற்றங்கரையை புனரமைக்கும் ‘துங்கபத்ரா ஆரத்தி’ திட்டத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்.

பெங்களூரு:

துங்கபத்ரா ஆரத்தி திட்டம்

  தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா அருகே துங்கபத்ரா ஆறு ஓடுகிறது. ஹரிஹரா பகுதி கோவில்கள் நிறைந்த பகுதியாகும். அங்குள்ள ஹரிஹரேஸ்வரா கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மேலும் அங்கு ஆறும் ஓடுவதால் ஏராளமான ஆன்மிகவாதிகள் அங்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் ஹரிஹரேஸ்வரா கோவில் முதல் துங்கபத்ரா ஆற்றங்கரை வரை, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் மேற்கொண்ட புனரமைப்பு பணிகளைப்போல் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.

  இதில் சில இந்து மடங்களின் பங்களிப்பும் உள்ளது. இந்த திட்டத்திற்கு ‘துங்கபத்ரா ஆரத்தி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ஹரிஹரேஸ்வரா கோவில் முதல் துங்கபத்ரா ஆற்றங்கரை வரை நடைபாதை அமைப்பது, 108 யோக மண்டபங்கள் அமைப்பது, துங்கபத்ரா ஆற்றை தூய்மைப்படுத்துவது என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அடிக்கல் நாட்டு விழா

  இதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் தொடக்க விழா நேற்று துங்கபத்ரா ஆற்றங்கரையில் நடந்தது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு இந்த பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும் அவர் துங்கபத்ரா ஆற்றுக்கு பூஜை செய்து வழிபட்டார். அதையடுத்து அவர் பேசும்போது கூறியதாவது:-

  ‘துங்கபத்ராஆரத்தி’ திட்டம் மூலம் துங்பத்ரா ஆறு தூய்மைப்படுத்தப்படும். மேலும் கங்கை நதிக்கரையில் உள்ளதுபோல் இங்கு யோக மண்டபங்கள் கட்டப்படும். மேலும் காசி விஸ்வநாதர் கோவில் போல் இந்த பகுதி முழுவதும் புனரமைக்கப்படும். இதன்மூலம் தென்னிந்தியாவில் ஹரிஹரேஸ்வரா கோவில் புனித தலமாக விளங்கும்.

நாகரீகமும், கலாசாரமும்...

  பஞ்ச பூதங்களில் ஒன்று தான் நீர். அதை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். ஹரிஹரா பகுதி சென்னை-மும்பை தொழில் வழித்தடத்தில் அமைந்துள்ளதால் இப்பகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அரசு முக்கியத்துவம் கொடுக்கும். முதலில் இப்பகுதியில் உள்ள 40 கிலோ மீட்டர் தூர சாலை மேம்படுத்தப்படும். ஹரிஹராவில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அவை இந்த ஆண்டிலேயே தொடங்கப்படும்.

  நாகரீகமும், கலாசாரமும் ஒருசேர வளர்ந்தவை ஆகும். சிலர் நாகரீகம் தங்களது கலாசாரத்தில்தான் அடங்கி உள்ளது என்று நம்புகிறார்கள். ஆனால் அது அப்படி இல்லை. நம் கலாசாரம் தான் நம்முடைய நாகரீகத்தை குறிக்கிறது.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story