செல்போன் கொடுக்க பெற்றோர் மறுப்பு: கல்லூரி மாணவன் தீக்குளித்து தற்கொலை


செல்போன் கொடுக்க பெற்றோர் மறுப்பு: கல்லூரி மாணவன் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 21 Feb 2022 2:46 AM IST (Updated: 21 Feb 2022 2:46 AM IST)
t-max-icont-min-icon

செல்போனை கொடுக்க பெற்றோர் மறுத்ததால் கல்லூரி மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விஜயநகர் அருகே நடந்து உள்ளது.

விஜயநகர்:

செல்போனில் விளையாட்டு

  விஜயநகர் மாவட்டம் கோட்டூர் தாலுகா தோலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவன் நாகராஜ்(வயது 17). இவன் கோட்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தான். இந்த நிலையில் நாகராஜுக்கு அவனது பெற்றோர் விலை உயர்ந்த செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்தனர். இதனால் நாகராஜ் எப்போதும் செல்போனில் விளையாடி கொண்டு இருந்துள்ளான்.

  இதனை கவனித்த பெற்றோர் செல்போனில் விளையாடாமல் படிப்பில் கவனம் செலுத்தும்படி கூறியுள்ளனர். ஆனாலும் நாகராஜ் செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடியபடியே இருந்ததாக தெரிகிறது. இதனால் நாகராஜிடம் இருந்து செல்போனை அவனது பெற்றோர் வாங்கி கொண்டனர். அந்த செல்போனை தன்னிடம் தரும்படி நாகராஜ் பெற்றோரிடம் பலமுறை கேட்டும் அவர்கள் கொடுக்கவில்லை. இதனால் நாகராஜ் மனம் உடைந்து காணப்பட்டான்.

தீக்குளித்து தற்கொலை

  இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய நாகராஜ் திடீரென மாயமானான். அவனை பெற்றோர் பல இடங்களில் தேடிவந்தனர். இந்த நிலையில் கோட்டூரில் உள்ள ஏரிக்கரையில் ஒரு வாலிபரின் உடல் எரிந்த நிலையில் கிடப்பது பற்றி கோட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  விசாரணையில் அந்த உடல் மாயமானதாக தேடப்பட்ட நாகராஜ் என்பதும், அவன் பெட்ரோலை தன் உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும் பெற்றோர் செல்போனை கொடுக்காததால் இந்த விபரீத முடிவை அவன் தேடிக் கொண்டதும் தெரிந்தது. இந்த சம்பவம் குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story