கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுக்க பா.ஜனதா, எஸ்.டி.பி.ஐ. அமைப்பு காரணம் - டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு


கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுக்க பா.ஜனதா, எஸ்.டி.பி.ஐ. அமைப்பு காரணம் - டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 21 Feb 2022 2:50 AM IST (Updated: 21 Feb 2022 2:50 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுக்க பா.ஜனதா, எஸ்.டி.பி.ஐ. அமைப்பே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு:

4-வது நாளாக போராட்டம்

  தேசிய கொடியை அவமதிக்கும் விதமாக பேசிய ஈசுவரப்பாவை மந்திரி பதவியில் இருந்து நீக்க கோரி பெங்களூரு விதானசவுதாவில் உள்ளிருப்பு போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 3-வது நாளை நிறைவு செய்து நேற்று 4-வது நாளில் கால் வைத்துள்ளது. இந்த நிலையில், சட்டசபையில் நேற்று முன்தினம் இரவு தூங்கிய காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், நேற்று காலையில் விதானசவுதா வளாகத்தில் எம்.எல்.ஏ.க்களுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டார்.

  அப்போது டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பா.ஜனதா, எஸ்.டி.பி.ஐ. காரணம்

  கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் அந்தந்த பள்ளியிலேயே முடிந்திருக்கும். கடந்த 5-ந் தேதி ஹிஜாப் விவகாரத்தில் தேவையில்லாமல் அரசு தலையிட்டது. பள்ளி, கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாட்டுகளை விதித்து உத்தரவு பிறப்பித்தது. ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுக்க பா.ஜனதா அரசே முழு காரணம். எஸ்.டி.பி.ஐ. அமைப்புடன் சேர்ந்து ஹிஜாப் விவகாரத்தை பா.ஜனதா பெரிதாக்கி விட்டது.

  இந்த விவகாரத்தில் அரசின் தலையீடு இல்லாமல் மட்டும் இருந்திருந்தால், பள்ளி, கல்லூரிகளிலேயே பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டு இருந்திருக்கும். ஹிஜாப் விவகாரத்தில் மாணவிகள் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது சரியல்ல. விவசாயிகள் மீதும் இந்த அரசு வழக்குப்பதிவு செய்து வருகிறது.

போராட்டத்திற்கு வரவேற்பு

  விவசாயிகள், மாணவிகள் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதன் மூலம், இந்த அரசு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. ஏனெனில் மாணவிகள் மீது வழக்குப்பதிவு செய்த விவகாரம் பெரிய அளவில் பிரச்சினையாகும். ஈசுவரப்பாவை மந்திரி பதவியில் இருந்து நீக்க கோரி காங்கிரஸ் இரவு, பகல் என நடத்தி வரும் போராட்டம் தேசிய அளவில் வரவேற்பை பெற்று தந்துள்ளது. எங்களது போராட்டத்திற்கு காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முழு ஆதரவு அளித்துள்ளனர். மல்லிகார்ஜுன கார்கே விதானசவுதாவுக்கு வந்து எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசி சென்றுள்ளார்.

  தேசிய கொடியை அவமதித்த ஈசுவரப்பாவை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும். கவர்னர் தாவர்சந்த் கெலாட்டே தானாக முன்வந்து, அவரை பதவியில் இருந்து நீக்கியதாக அறிவிக்க வேண்டும். ஈசுவரப்பாவை பதவியில் இருந்து நீக்கும் வரை காங்கிரஸ் போராட்டம் தொடரும். சட்டசபைக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும். காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் தாலுகா அலுவலகம் முன் நாளை (அதாவது இன்று) போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தாசில்தாரிடம் மனுவும் கொடுக்க உள்ளனர்.

பதவியில் இருந்து நீக்கினால்...

  நாளையே (இன்று) ஈசுவரப்பாவை மந்திரி பதவியில் இருந்து நீக்கினால் எங்களது போராட்டத்தை முடித்து கொள்வோம்.

  காங்கிரஸ் தலைவர்களை டெல்லிக்கு அழைத்து வரும்படி மேலிட தலைவர்கள் அழைப்பு விடுத்திருப்பது உண்மை தான். இதற்கு முன்பு நான் மாநில தலைவராக பதவி ஏற்றதும், என்னையும், சித்தராமையாவையும் டெல்லிக்கு வரவழைத்து பேசி இருந்தனர். அப்போது முக்கிய தலைவர்களை டெல்லிக்கு அழைத்து பேச வேண்டும் என்று கூறி இருந்தேன். அதன்படி, கர்நாடக தலைவர்கள், டெல்லிக்கு செல்ல இருக்கிறோம்.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story