மெட்ரோ ரெயில் பாதை, நிலையங்கள்: கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான பணிகள் தீவிரம் - 2025-ம் ஆண்டு திறக்க திட்டம்


மெட்ரோ ரெயில் பாதை, நிலையங்கள்: கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான பணிகள் தீவிரம் - 2025-ம் ஆண்டு திறக்க திட்டம்
x
தினத்தந்தி 21 Feb 2022 4:55 AM IST (Updated: 21 Feb 2022 4:55 AM IST)
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயிலுக்காக கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தட பணிகளை நிறைவு செய்து வருகிற 2025-ம் ஆண்டு திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னையில் முதல் கட்டத்தில் 2 வழித்தடங்களை நிறைவு செய்துவிட்டு, தற்போது 2-வது கட்டமாக 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3, 4 மற்றும் 5-வது வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் 4-வது வழித்தடத்தில் வரும் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் பாதையில் 27 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை வரை பாதை மற்றும் ரெயில் நிலையம் கட்டுமானப்பணிகளுக்கான ஒப்பந்தாரர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

அனைத்து பணிகளும் திட்டமிட்டபடி நடந்தால், அடுத்த இரண்டரை ஆண்டுகளில் சென்னை பெருநகரவாசிகள் மெட்ரோ ரெயிலில் கோடம்பாக்கத்தில் உள்ள பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை 16 கிலோ மீட்டர் தூரம் கொண்ட உயரமான பாதையில் முதல் கட்டமாக மெட்ரோ ரெயிலில் வசதியாக பயணிக்கலாம். தொடர்ந்து கலங்கரை விளக்கம் முதல் பவர்ஹவுஸ் வரை 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சுரங்கப்பாதை பணிகள் முடிந்த உடன் இந்தப்பாதையிலும் ரெயில் போக்குவரத்து தொடங்க இருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி ஒன்றில், பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான வணிக நடவடிக்கைகளுக்கு 2025-ம் ஆண்டு ஜூன் மாதமும், கலங்கரை விளக்கம் முதல் பவர்ஹவுஸ் வரை 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் பணிகளை நிறைவு செய்து, பாதுகாப்பு கமிஷனர் ஆய்வுக்கு பின்னர் ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் சார்பில் நடக்கும் அனைத்து கூட்டங்களிலும் வருகிற 2025-ம் ஆண்டு காலக்கெடு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுவதுடன், அழுத்தமும் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பணிகளை நிறைவு செய்வது ஒப்பந்தக்காரர்கள் கையில் தான் உள்ளது. கடந்த ஆண்டு மாநில பட்ஜெட்டிலும் 2-ம் கட்ட திட்டம் வருகிற 2025-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

4-வது வழித்தடத்தில் ரெயில்கள் ஓடத்தொடங்கினால்,​மெரினா கடற்கரை, மயிலாப்பூர், நந்தனம், தியாகராயநகர், கோடம்பாக்கம் மற்றும் வடபழனி போன்ற பல மாநகர பகுதிகளை போரூர், அய்யப்பந்தாங்கல், காட்டுப்பாக்கம் மற்றும் பூந்தமல்லி போன்ற மேற்கு புறநகர் பகுதிகளுடன் இணைக்கப்படும்.

26.1 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்தப்பாதையில் அமைய உள்ள ரெயில் நிலையங்களில் பொருத்துவதற்காக, 193 நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்கள்) மற்றும் 174 லிப்டுகளை வாங்க ஒப்பந்தப்புள்ளியை கோரப்பட்டது. அந்த ஆவணத்தில், பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரை 18 மெட்ரோ ரெயில் நிலையங்கள் உயர்மட்டப்பாதையிலும், கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை 9 மெட்ரோ ரெயில் நிலையங்கள் சுரங்கப்பாதையிலும் அமைக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போரூர் முதல் பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட வழித்தடத்திற்கான தூண்கள் அமைக்கும் பணி ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், கோடம்பாக்கம், வடபழனி போன்ற வழித்தடத்தில் பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ரெயில் நிலையங்கள் முழுவதையும் இணைக்கும் 4 ஒப்பந்தங்களும், பூந்தமல்லியில் பணிமனை ஒன்று கட்டுவதற்கான ஒரு ஒப்பந்தமும் இதில் அடங்கும். மின்சார அமைப்புகளுக்கும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை கட்டுமான ஒப்பந்தங்கள் முழுமையாக வழங்கப்பட்ட ஒரே வழித்தடம் இதுவாகும் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story