அரிசி ஆலையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்


மயிலாடுதுறை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
x
மயிலாடுதுறை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
தினத்தந்தி 21 Feb 2022 6:46 PM IST (Updated: 21 Feb 2022 6:46 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே கொள்முதல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து அரிசி ஆலையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை:-

மயிலாடுதுறை அருகே கொள்முதல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து அரிசி ஆலையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கொள்முதல் நிலையம்

மயிலாடுதுறை அருகே திருவேள்விக்குடி கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகில் உள்ள கடலங்குடி கிராமத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நவீன அரிசி ஆலையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்ைத நடத்தினார். இதில் வருகிற கொள்முதல் பருவத்தில் திருவேள்விக்குடி கிராமத்தில் மீண்டும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கொண்டு வருவது, ஏற்கனவே திருவேள்விக்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை பார்த்து வந்த சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவது. 

நேரடியாக கொள்முதல்

திருவெள்விக்குடி கிராமத்தில் உள்ள நெல் மூட்டைகள் அனைத்தையும் நேரடியாக சென்று கொள்முதல் செய்வது என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 
விவசாயிகளின் போராட்டத்தையொட்டி மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் ஏராளமான போலீசார்  நவீன அரிசி ஆலை முன்பு குவிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. முற்றுகை போராட்டம் காரணமாக நேற்று காலை முதல் மதியம் வரை நவீன அரிசி ஆலையில் இருந்து அரிசி மூட்டைகளை வெளியே கொண்டு செல்லும் பணி தடைபட்டது. அதேபோல வெளியில் இருந்து நெல் மூட்டைகள் லாரி மூலம் உள்ளே கொண்டு செல்வதும் தடைபட்டது.

Next Story